Ramanathapuram Lok Sabha Election Results 2024: 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் மோடி அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.

ராமநாதபுரம்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து தொகுதிகளும் முக்கியமானதாக கருதப்பட்டாலும், இந்த முறை பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்திருப்பது ராமநாதபுரம் மக்களவதை் தொகுதியே ஆகும். அதற்கு காரணம் இந்த முறை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருப்பதே ஆகும்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 17 ஆயிரத்து 688 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இந்த தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 3 ஆயிரத்து 36 ஆகும். மொத்தம் 68.16 சதவீத வாக்குகள் கடந்த 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது.

சவால் தருவாரா ஓ.பி.எஸ்?

ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக களமிறங்கியதால் நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக நவாஸ்கனி களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் சார்பில் பா.சத்யா போட்டியிட்டுள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில், அ.தி.மு.க.வில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வின் கூட்டணியுடன் இந்த தொகுதியில் களமிறங்கியிருப்பதால் ராமநாதபுரம் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கும், ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் சவால் அளிப்பாரா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.