உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. மினி சுவிட்சர்லாந்து (Mini Switzerland) என அழைக்கப்படும் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில்தான் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பனியால் மூடப்பட்ட மலைகள், பசுமை மாறா தேவதாரு மரம், புல்வெளிகள் என இயற்கை எழில் கொஞ்சும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ஒரே நாள் இரவில் அத்தனை அழகியலையும் இழந்து இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியாக காட்சி அளிக்கிறது.

உலக நாடுகளை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் சூழலை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியின் காரணமாக காஷ்மீர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு, மோடி தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த சூழலில், பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

பைசரன் (Baisaran Valley) பள்ளத்தாக்கு பகுதி எங்கு இருக்கிறது?

பனியால் மூடப்பட்ட மலைகள், பசுமை மாறா தேவதாரு மரம், புல்வெளிகள் என இயற்கை எழில் கொஞ்சும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இயற்கையின் அழகியலையும் அமைதியையும் சாகசத்தையும் தேடும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து செல்கின்றனர்.

பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில்தான் பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பரந்த புல்வெளிகள், ஆல்பைன் மரங்கள், பனியால் மூடப்பட்ட மலைகள் என ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று காட்சி அளிப்பதன் காரணமாகவே இது மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பஹல்காமின் லிடர் நதிக்கரையோரத்தில் உள்ள புகழ்பெற்ற மலைப்பாதைகள் மற்றும் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. 'மேய்ப்பர்களின் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் அமர்நாத் குகைக் கோயில், இங்குதான் உள்ளது.

பழுப்பு நிற கரடிகள் மற்றும் கஸ்தூரி மான்கள் உள்ளிட்ட விலங்குகளின் தாயகமான அரு வனவிலங்கு சரணாலயம், அழகிய பீட்டாப் பள்ளத்தாக்கு, துலியன் ஏரி ஆகியவை பஹல்காமின் பிரபலமான இடங்களாகும். கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 439 சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர் என மத்திய அரசின் தரவு சொல்கிறது.

தாக்குதல் நடந்தது எப்படி?

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து வெளியே வந்த 40 சுற்றுலாப் பயணிகளை நோக்கி பயங்கரவாதிகள் சுடத் தொடங்கியதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தரப்பு கூறுகிறது.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தோம். மக்கள் மலைக்கு மேலே சென்றிருந்தனர். பிற்பகல் 2:45 மணியளவில், மக்கள் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். நாங்கள் விசாரித்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரிய வந்தது" என்றார்.