தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் வைத்து அழகுபார்க்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவால் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத கால கட்டத்தில் அந்த பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்று நடத்தி வந்தார். அப்படித்தான் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் போதும், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் ஓ.பன்னீர் செல்வமே முதலமைச்சராக பதவி வகித்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், தனி அணியாக செயல்பட்டு வந்தார். அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும், ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இரட்டை தலைமையை மாற்ற திட்டம் போட்ட எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை முன்மொழிந்தார். இதனால் மீண்டும் தர்மயுத்தம் 2.o தொடங்கிய ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தினார். அதில் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் அதிகவில் இணைய பாஜகவை நம்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பே இல்லையென மறுத்துவிட்ட நிலையில், அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு கிடைத்த பாதை தான் அண்ணா அறிவாலயம்,

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். எனவே திமுகவில் ஓபிஎஸ் இணைய திட்டமிட்டுள்ளதாக அப்போதே தகவல் பரவியது. இந்த நிலையில் தான் சட்டமன்ற தேர்தலையொட்டி திமுகவில் இணைய காய் நகர்த்தினார். கடந்த சில வாரங்களாக திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என கூறியும் வந்தார். இவரது ஆதரவு எம்எல்ஏ அய்யப்பனும் தமிழக சட்டமன்றத்திலேயே திமுக ஆட்சிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார். எனவே திமுகவில் ஓபிஎஸ் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.