அயலக இந்தியரின் வங்கி லாக்கரில் 20.6 லட்சம் மற்றும் 188 கிராம் தங்கம் திருட்டு. வங்கி ஊழியர் கைது

அமெரிக்காவில் வசிக்கும் அயலக இந்திய வாடிக்கையாளரான சுரூபா ராணி சிவக்குமார் என்பவர் , தனியார் வங்கியின் வேளச்சேரி கிளையில் லாக்கர் வைத்திருந்தார். அவர் அடிக்கடி லாக்கரைப் பயன்படுத்தாததால் லாக்கரை அணுகும் உரிமையைச் சென்னையில் வசிக்கும் தனது தாயிடம் ஒப்படைத்திருந்தார். ஒரு வழக்கமான சரி பார்ப்பின் போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 238 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது சகோதரர் செந்தில்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 12 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து லாக்கர் சாவியை பெற்று பயன்படுத்திய தனியார் வங்கியின் வேளச்சேரி கிளையில் Grade-II மேலாளராகவும், லாக்கர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்த வங்கி ஊழியரை விசாரணை செய்தும் , தகுந்த நவீன தொழில் நுட்ப சான்றுகளுடன் அவர் குற்ற செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் 12 ஆம் தேதி தனிப் படையினர் வங்கி வளாகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியரை முறையான விசாரணை செய்து பின்னர் கைது செய்து விசாரணையில் லாக்கரை அங்கீகாரமின்றித் திறந்து நகைகளை எடுத்து அதை வேளச்சேரியில் உள்ள தனியார் அடகு கடையில் 21 லட்சத்திற்கு விற்று விட்டதாகவும், மீதமுள்ள ரொக்கத்தை தான் வேலை செய்து வரும் வங்கி அலுவலகத்திலயே மறைத்து வைத்திருப்பதாகவும் கொடுத்த வாக்கு மூலத்தின்படி மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தனியார் வங்கியின் மீட்டிங் அறையிலிருந்து 20,60,000, மற்றும் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரில் அடகு கடையிலிருந்த 188 கிராம் உருக்கிய தங்கக் கட்டிகள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர் அன்று சைதாப்பேட்டை 11-வது பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போதை பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது

சென்னை சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு–EVR சாலை சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரண்டு நபர்களை விசாரித்த போது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் ஆண்டோ ( எ ) அந்தோணி (34) , ரூஸ்வெல் (22) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 3.2 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் குற்றத்தில் பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஆண்டோ ( எ ) அந்தோணி மீது ஏற்கனவே கொலை முயற்சி , திருட்டு, கஞ்சா வைத்தல் உட்பட மொத்தம் 6 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.