புதிய வீடு கட்டும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து செய்யும் அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில பணிகளில் அடிப்படை நடைமுறை தெரியாததால், மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஒரு கட்டடம் கட்டும் போது அதற்கான கம்பிகளை தரமானதாக தேர்வு செய்வதில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதனுடன் இணைந்த பொருளான கான்கிரீட் கலவை விஷயத்தில் மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

புதிய வீடு கட்டும் பணியை ஒப்படைக்கும் போது அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலையில், பல்வேறு விஷயங்களை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும். இதில் கான்கிரீட் தொடர்பாக குறிப்பிட வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர்.

நம் நாட்டில் கட்டுமான பணிக்கான கான்கிரீட் கலவை என்றால், ஜல்லி, சிமென்ட், மணல் சேர்ந்த கலவை என்ற அளவில் தான் மக்களிடம் புரிதல் உள்ளது. இதில் எந்த கட்டடத்துக்கு எந்த வகை கான்கிரீட் கலவையை தயாரிக்க வேண்டும் என்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

குறிப்பாக இந்திய தர நிர்ணய அமைப்பு வகுத்துள்ள வரையறைகளின் அடிப்படையில் சாதாரண எம் 15 வகை கட்டடங்களுக்கு கான்கிரீட் கலவையை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு பங்கு சிமென்ட், 2 பங்கு மணல், மூன்று பங்கு ஜல்லி சேர்த்து இவ்வகை கான்கிரீட் தயாரிக்கப்படுகிறது.

சாதாரண பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கு எம் 10 , எம் 15 , எம் 20 ஆகிய வகைகளுக்கு உட்பட்ட கான்கிரீட் கலவையை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒரு சதுர செ.மீக்கு சுமை தாங்கு திறன் 200 கிலோ அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உங்கள் கட்டடத்துக்கு தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவை விரைவாக உலர வேண்டும் என்பது மட்டும் போதாது.

அது எவ்வித சேதமும் இன்றி நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும். குறிப்பாக விரிசல்கள் இன்றி உழைக்க வேண்டியது அவசியம். இதில் சாதாரண கட்டடம் கட்டும் போது அதற்கான சுமையை தாங்கும் அளவுக்கான வகைக்கு உட்பட்ட சிமென்ட்டை பயன்படுத்தினால் போதும்.

ஆர்வமிகுதியில், அதிக சுமை ஏற்படும் கட்டடத்துக்கான கான்கிரீட்டை சாதாரண கட்டடங்களுக்கு பயன்படுத்தினால் விரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். பெரிய கட்டுமானங்களுக்கான கான்கிரீட் கலவையை மாற்றி, சிறிய கட்டடங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை.வல்லுனர்கள்.