நீட் முதுகலைத் தேர்வின் ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 18) மருத்துவ அறிவியல் தேசியத் தேர்வுகள் வாரியம் சார்பில் வெளியாக உள்ளது. இதைக் காண்பது எப்படி என்று காணலாம்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

எதற்கெல்லாம் நீட் முதுகலைத் தேர்வு?

அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

ஜூன் 23ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு

ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நீட் முதுகலைத் தேர்வின் ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 18) வெளியாக உள்ளது. ஹால் டிக்கெட் குறித்து குறுஞ்செய்தி, இ- மெயில் மூலமாகத் தேர்வர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டில் தேர்வர் பெயர், வரிசை எண், தேர்வு தேதி, தேர்வுக்கு வர வேண்டிய நேரம், தேர்வு மைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதைத் தேர்வு மையத்துக்குச் செல்லும்போது, எடுத்துச்செல்ல வேண்டியது அவசியம்.

அனுமதிச் சீட்டில் தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். புகைப்படம் 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

மருத்துவ அறிவியல் தேசியத் தேர்வுகள் வாரியத்தின் (National Board of Examinations in Medical Sciences - NBEMS) அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அதாவது தேர்வர்கள் https://natboard.edu.in/

என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள NEET PG Exam 2024 இணைப்பை க்ளிக் செய்யவும்.

போதிய லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

அனுமதிச் சீட்டு பக்கம் திறக்கப்படும்.

அதற்கான பிடிஎஃப்ஃபை சேமித்து வைத்துக்கொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/