பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எம்.பி , எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கு விசாரணைகளைக் கண்காணித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க் களுக்கு எதிராக 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் என 216 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார். அதையடுத்து நீதிபதிகள், இதில் பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவுகள் காரணமாக பல ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தனிக் கவனம் செலுத்தி விசாரணை முடிக்க வேண்டும்

எத்தனை வழக்குகளில் தடை உத்தரவு உள்ளன என்ற விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தடையுத்தரவு இல்லாத வழக்குகளையும், 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றங்கள் தனிக் கவனம் செலுத்தி விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டு பதிவைக் கூட இன்னும் மேற் கொள்ளாமல் காலம் தாழ்த்துவது கண்டிப்புக்குரியது. இந்த வழக்குகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க வேண்டும். சாட்சி விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

அப்போது, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருவதாக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தகவல் தொழில்நுட்ப பதிவாளரிடம் விவரம் பெற்று தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 25 க்கு தள்ளி வைத்துள்ளனர்.