நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்பலை வானொலி தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, 2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படம் மூலம் காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் தோன்றிய அவர், 2019 ஆம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் கதை நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அரசியல் நையாண்டியாக வெளியான அப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து வீட்ல விசேஷன், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் என மிக கவனமுடன் கதைகளை தேர்வு செய்து ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு அவர் “மூக்குத்தி அம்மன்” என்ற படத்தை நண்பர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கினார். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடித்தார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அபிநயா, மௌலி, அஜய் கோஷ் என பலரும் நடித்திருந்தனர். கிரிஷ் ஜி இசையமைத்த இப்படம் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. கொரோனா காரணமாக தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசானது.

Exclusive Buzz:#MookuthiAmman2 on card and #Trisha expected to play the lead role directed by RJ Balaji 🤩

But innum PK2 varalaiye 😯 pic.twitter.com/LHZazSVIUn

— Kolly Corner (@kollycorner) May 30, 2024

இந்த படம் கடவுளின் தூதர் என்ற பெயரில் போலி சாமியார்கள் செய்யும் அட்டூழியங்களை காமெடி நிறைந்த திரைக்கதையாக ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தது. மேலும் தமிழில் சாமி படங்களே ஒரு தசாப்தத்துக்கும் மேல் ரிலீசாகாமல் இருந்த நிலையில், அந்த குறையை மூக்குத்தி அம்மன் தீர்த்தது. மேலும் சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க ஆர்.ஜே.பாலாஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் அம்மன் கேரக்டரில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

உண்மையில் நயன்தாராவுக்கு முன்னால் ஆர்.ஜே.பாலாஜி அந்த கதையை நடிகை அனுஷ்காவிடம் தான் சொல்லியிருந்தார். ஆனால் அவர் 8 மாதங்கள் காத்திருக்க சொன்னதால் நயனை நடிக்க வைத்தார்.