திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்த திமுக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்தன. இதனால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் தொடங்கி அந்த கூட்டணியில் இருந்த தலைவர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதேசமயம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த திமுக, கடைசி நேரத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தையும், அக்கட்சி தலைவர் விஜயையும் விமர்சித்தது. அதுவும் பெயரை குறிப்பிடாமல் பரப்புரையில் விமர்சனம் செய்தது.

ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. அதில் திமுக 59 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வென்றது.

விஜய் பக்கம் சென்ற கட்சிகள்

இந்த தேர்தலில் யாரும் எதிர்பாதவிதமாக ஒரு மாபெரும் அரசியல் நிகழ்வு நடந்தது. அதாவது திமுக, அதிமுக இல்லாத தனித்து போட்டியிட்ட அதுவும் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜயையும், தவெகவுக்கு களத்தில் இருந்த ஆதரவையும் அனைத்து கட்சிகளும் சரியாக கணிக்கவில்லை. இதனால் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தோல்வியே மிஞ்சியது.

எனினும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவைகளின் ஆதரவை விஜய் நாடினார். இதில் காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக அமைச்சரவையில் இடம்பிடித்தது. அதேசமயம் நீண்ட இழுபறிக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தவெக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சாத்தியப்படாது என சொல்லப்பட்ட கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது.

தவிக்கும் திமுக.. மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு

இந்த நிலையில் திமுக தொடங்கியது முதலே இதுவரை ஒருமுறை கூட தனித்து போட்டியிட்டது கிடையாது. கூட்டணி கட்சிகளை தன்னுடைய பலம் என கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் நம்பினர். பலமுறை கூட்டணியை முறித்துக் கொண்டு எந்த கட்சி சென்றாலும் அவர்களை இன்முகத்துடன் மீண்டும் வரவேற்று கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அரசியல் செய்து வந்தார்கள். ஆனால் இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே எதிர்பாராத வகையில் தேர்தல் தோல்வி அமைந்தது.

அதேசமயம் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது மூலம் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் விரைவில் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் என சொல்லப்படுகிறது.

அதனால் காலத்துக்கேற்றது போல நாமும் கூட்டணியை நம்பி பலனில்லை எனவும், இனி ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு முடிவை தெரிந்து கொள்ளலாம் எனவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை 234 தொகுதிகளிலும் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனித்து களமிறக்கினார். இதில் 136 இடங்களில் அதிமுக வென்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

அதாவது அதிமுக கூட்டணியில் 6 கட்சிகள் இருந்தாலும் அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட வைத்தார். ஆனால் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை அவர்களது சின்னத்தில் போட்டியிட வைத்திருக்கிறது. எனினும் 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி மக்களின் முடிவை பார்க்கலாம் எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.