தமிழ்நாட்டில் அனைவரும் எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. ஆளுங்கட்சியான திமுக பலமான கூட்டணியுடனும், முன்னாள் ஆளுங்கட்சி என்ற பலத்துடன் களமிறங்கிய அதிமுக-விற்கும் தனி ஆளாக தவெக பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இரு கட்சியையும் வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த தோல்விக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐந்தாண்டில் ஏராளமான திட்டங்கள்:

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக்தியை மீறி உழைத்தேன்:

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.

நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

லட்சியமும், கொள்கையுமே முக்கியம்:

எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.

எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.

இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னை திமுக கோட்டை என்று கருதப்படும் சூழலில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தவிர மற்ற 14 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. கிராமப்புறங்களிலும் தவெக வெற்றி பெறாது என்று பலரும் விமர்சித்த நிலையில், அங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு வங்கி எகிறியுள்ளது. திமுக இந்த தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் என்று கணித்த பலருக்கும் இந்த முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது. அன்பில் மகேஷ், கீதாஜீவன் போன்ற பல அமைச்சர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.