கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வினோத், தமிழ்நாடு அரசின் புதிய வேளாண்மை துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பின்னணி பற்றிக் காணலாம்.

தமிழகத்தின் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில் 21 தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.,க்கள், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ. வினோத்தும் ஒருவர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை கும்பகோணம் தொகுதி திமுகவின் கோட்டையாக திகழ்ந்தது. அங்கு திமுகவைச் சேர்ந்த சாக்கோட்டை அன்பழகன் தொடர்ச்சியாக 3 முறை அங்கு எம்.எக்.ஏ.,வாக வென்றுள்ளார். கட்சி தொண்டர்களிடையே நன்மதிப்பை பெற்ற அவர் இந்த தேர்தல் அறிவிப்பு சில தினங்கள் முன்னாள் சர்ச்சையில் சிக்கினார். கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் அவருக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.

இந்த நிலையில் தான் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் கண்ட வினோத், சாக்கோட்டை அன்பழகனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியில் சீனியரான விஜய் சரவணன் அமைச்சராவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் வினோத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவர் பதவி பிரமாணம் எடுத்து வேளாண்மை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பலரும் யார் இந்த வினோத் என்ற கேள்வி இருக்கலாம். தொகுதிக்கு புதியவராக இருந்தாலும் வினோத் தவெகவில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் அவர் பெயரை அறிவிக்குபோது பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை. எப்படியாவது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வசம் இருந்தது. 32 வயதான வினோத், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட வினோத் இன்று தமிழ்நாடு அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

வினோத் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 8 என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் பரப்புரை செல்லாமல் பல இடங்களில் தவிர்த்தார். தஞ்சாவூருக்கு வந்த அவர், கும்பகோணம் போன்ற இடங்களுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் வினோத் வித்யாசமான முறையை கையாண்டார். அதன்படி ப்ரொஜக்டர் மூலம் ஹோலோகிராம் முறையில் விஜயின் உருவத்தை ஒளிரச் செய்து கட்சி தலைமை கவனம் ஈர்த்தார். அவரைத் தொடர்புக் கொண்டு தவெக தலைமைக்கழக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்ததோடு அந்த தொழில்நுட்பம் பற்றியும் விசாரித்தனர்.

கும்பகோணத்தில் பட்டிதொட்டியெங்கும் அந்த தொழில்நுட்பத்தில் விஜய் பேசுவது போல செய்ய மக்களிடையே வினோத் அறியப்பட்டார். கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பத்தூர் இவருடைய பூர்வீக கிராமமாகும். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அவர் தனது சித்தியின் அரவணைப்பில் தான் வளர்ந்துள்ளார்.

இவருடைய சித்தி குடும்பம் நகை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்க, வினோத்தும் படிப்பை பாதியில் கைவிட்டு விட்டு தொழிலில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2011ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வினோத் அங்கு தகவல் தொழில் நுட்ப பிரிவு, இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் சமூகத்தில் பலரின் தொடர்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலத்திலும் மக்களுக்காக நின்று பல்வேறு உதவிகளை செய்துள்ளதால் மக்களிடையே புகழ்பெற்றவராக திகழ்ந்தார். எப்படி திமுகவின் கோட்டையாக இருந்த கும்பகோணம் தவெகவின் வசம் சென்றதோ அதேபோல் அந்த தொகுதியும் மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.