மகளிர் பிரிமயர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் வதோராவில் உள்ள கோடம்பி மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பைக்கு அதிர்ச்சி தொடக்கம்:

இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் டக் அவுட்டாக, யஸ்திகா பாட்டீயா 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த நட் ஸ்கிவேர் ப்ரூன்ட் - ஹர்மன்பீரித் ஜோடி மும்பையை மீட்கும் பொறுப்பில் ஆடினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி அதிரடிக்கு மாறினர்.

அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத்:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினர். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அவர் விளாசிய நிலையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 22 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்திருந்த நிலையில் அவர் 42 ரன்னில் அவட்டானார். பின்னர், அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டத் தொடங்கினர்.

தனி ஆளாக காப்பாற்றிய ப்ரண்ட்:

ஆனாலும், தனி ஆளாக நட் ஸ்கிவேர் ப்ரூன்ட் மும்பை அணியை தாங்கிப் பிடித்தார். பவுண்டரிகளாக விளாசி மும்பை ஸ்கோரை உயர்த்தினார். அமெலியா கெர் 9 ரன்னில் ரன் அவுட்டாக, சஜனா 1 ரன்னிலும், அமன்ஜோத் கவுர் 7 ரன்னிலும் அவுட்டாக பின்வரிசை வீராங்கனைகள் நடையை கட்டினாலும் பவுண்டரி மழையை ப்ரண்ட் பொழிந்தார்.

இதனால் ஒரு முனையில் விக்கெட்டுகளை இழந்தாலும் மும்பை அணி 150 ரன்களை கடந்தது. ப்ரண்டை அவுட்டாக்க இயலாவிட்டாலும் மறுமுனையில் வீராங்கனைகளை அவுட்டாக்கிய டெல்லி வீராங்கனைகள் 19.1 ரன்னில் 164 ரன்னில் மும்பையை ஆல் அவுட்டாக்கியது. ஆனாலும், தனி ஆளாக கடைசி வரை அவுட்டாகாத ப்ரண்ட் 59 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 80 ரன்களை எடுத்தார். நெருக்கடியான 80 ரன்களை எட்டிய ப்ரண்டை சக வீராங்கனைகள் பாராட்டினர்.

டெல்லி அணிக்காக அனபெல் சதர்லேண்ட் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது டெல்லி அணி இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. மும்பை அணியில் ஜிந்திமணி, ஷப்னிம், சைகா இஷாக் போன்ற பந்துவீச்சாளர்கள் உள்ளனர். டெல்லி அணியில் கேப்டன் மெக் லேனிங், ஷபாலி வர்மா, ஆலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற அதிரடி வீராங்கனைகள் உள்ளனர்.