Metro Fare Hikes: மெட்ரோ ரயில் சேவையில் கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லியில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ டிக்கெட் விலை உயர்வு:

தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க, இனி கூடுதல் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். காரணம், இன்று முதல் அங்கு திருத்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. நான்காவது கட்டண நிர்ணய கமிட்டியின் பரிந்துரையின்படி, கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரயில் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் சேவை 2002ம் ஆண்டு அறிமுகமான நிலையில், கடைசியாக 2017ம் ஆண்டு டிக்கெட் விலை திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டண விவரம் என்ன?

இந்த உயர்வு பெயரளவுக்கு மட்டுமே என்று விளக்கப்படுகிறது. காரணம், பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணம் ரூ.1 முதல் ரூ.4 வரை மட்டுமே உயர்ந்துள்ளது. விமான நிலைய விரைவுப் பாதையில் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், 32 கிலோ மீட்டருக்கும் அதிகமான பயணங்களுக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வு, டெல்லி - தலைநகர் பிராந்தியத்தில் உள்ள 390 கி.மீ மற்றும் 285 நிலையங்களை உள்ளடக்கிய அதன் நெட்வொர்க் முழுவதுமான அனைத்து தூர அடுக்குகளுக்கும் பொருந்தும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், தள்ளுபடி கட்டணங்கள் பொருந்தும். அதன்படி, 5 கி.மீ வரையிலான குறுகிய பயணங்களுக்கு ரூ.11, அதிகபட்ச கட்டணமாக ரூ.54-ம் வசூலிக்கப்பட உள்ளது.

கட்டண உயர்வு ஏன்?

ரயில் இயக்கத்திற்கான செலவு, பராமரிப்பு சேவையின் தரம், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அம்சங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கான செலவை ஈடு செய்ய கட்டண உயர்வு அத்தியாவசியமானது என டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், விலை உயர்வு அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பினை பெற்றுள்ளது. வாழ்வாதார செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் சுமையாக மாறும் என வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கூடுதல் வருவாய் எப்படி பயன்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்துகின்றனர். கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தாலும், புதிய கட்டணம் இன்று முதல் டெல்லி மெட்ரோ சேவையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் ஷாக்...

டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் அறிவிப்பு சென்னை மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் சுமார் 1 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது மக்களின் தினசரி போக்குவரத்தில் மெட்ரோ சேவை பெற்றுள்ள முக்கியத்துவத்தை காட்டுகிறது. கடைசியாக, கடந்த 2021ம் ஆண்டில் 70 ரூபாயாக இருந்த அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாயாக குறைத்து சென்னை மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி மெட்ரோவை பின்பற்றி சென்னை மெட்ரோவும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.