எந்த காலத்திலும் திமுகவில் இருந்து சிறுபான்மையின மக்களை அந்நியப்படுத்த முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 4 கட்சிகள் களம் காண்பது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல்முறை களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கும், வெற்றி பெறும் என பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகிறது. கள நிலவரம் சூடுபிடித்துள்ள நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் எங்கு சென்றாலும் திமுகவை தீயசக்தி என விமர்சிக்கிறார். அவர் சார்ந்த கிறிஸ்தவ சமுதாயம் மற்றும் மீனவர்கள் சமூக வாக்குகள் அவருக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு கடற்கரை சார்ந்த நகரத்தைச் சேர்ந்தவர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு எட்டுக்கட்டில் சொல்லக்கூடிய கணக்கு. கிறிஸ்தவ மக்கள், கடலோர சமுதாய மக்கள் விஜய் பின்னால் சென்று விடுவார்கள் என கூறுகிறார்கள். அவர்கள் என்ன கிள்ளுக்கீரையா?. இது தவறான பிரச்சாரம். பாஜக போன்ற கட்சிகள் திமுகவின் வாக்குகளை எப்படியாவது பிரிக்க முடியுமா என்ற கண்ணோட்டத்தில் சொல்லக்கூடிய ஒரு வெற்று பரப்புரை தான். இது எந்த காலத்திலும் திமுகவில் இருந்து சிறுபான்மையின மக்களை அந்நியப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுகவுக்கு ஒரு உறுதியான வாக்கு வங்கி இருப்பது ஊர் அறிந்த உண்மையாகும். அதனை குறைக்கும் முயற்சியை பலர் எடுத்தாலும் எந்த காலக்கட்டத்திலும் அது மாறவில்லை. ஆனால் இந்த முறை வாக்கு வங்கி கூடும் என நான் சொல்கிறேன்.

ஏனென்றால், பல மக்கள் நல திட்டங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அதை பிரித்து விடுவார்கள் என சொல்வது பாஜகவின் திட்டமிட்ட பிரச்சாரம். ஆனால் எங்களது வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது.

விஜய்க்கு விசில் சின்னம் கொடுத்திருக்கும் நிலையில், எங்கள் சின்னமான உதயசூரியன் எதைப் பற்றியும் பயப்பட்டாது. நாங்கள் எவ்வளவு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் திமுகவின் பின்னால் இருக்கிறார்கள். தவெகவில் இணைந்திருக்கும் இளைஞர்களால் எங்களது இளைஞர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கண்டிப்பாக திமுகவில் புதிய கட்சிகள் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். விரைவில் அவர்கள் வருவார்கள்" என தெரிவித்துள்ளார்.