நடிகர் அஜித்குமார் நடித்துள்ள மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், அதன் பழைய வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மங்காத்தா படம் ரீ-ரிலீஸ்

கிளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் “மங்காத்தா”. நடிகர் அஜித்குமாரின் 50வது படமாக வெளியான இதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தியேட்டர் விநியோக உரிமையைப் பெற்றிருந்தது. மங்காத்தா படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆண்ட்ரியா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், மஹத், வைபவ், அஞ்சலி, சுப்பு பஞ்சு, அஸ்வின் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இப்படம் அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஜனவரி 23ம் தேதியான இன்று மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏதோ அஜித்தின் புதுப்படம் வெளியானதைப் போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையிட்ட இடமெல்லாம் அடுத்த 4 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மங்கத்தா படம் டிக்கெட் முன்பதிவில் சாதனைப் படைத்து வருகிறது.

ஷூட்டிங்கை கேன்சல் செய்த சிலம்பரசன்

இந்த நிலையில் ஒரு பழைய வீடியோ ஒன்றை பிரேம்ஜி அமரன் சிலம்பரசனைப் பற்றி பேசியுள்ளார். அதில், “நடிகர் சிம்பு மங்காத்தா படம் வெளியாக உள்ள சூழலில் மைசூரில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்தார். அப்போது எனக்கு போன் செய்து, தல படம் ரிலீசாகவுள்ளது. நான் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும். ஆனால் நான் மைசூரில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.

நான் படம் ரிலீசாகும் நாளில் ஷுட்டிங்கை கேன்சல் செய்து விட்டு, சென்னை வந்து படம் பார்த்து விட்டு மீண்டும் மைசூருக்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதனைத் தொடர்ந்து சென்னை வந்து படம் பார்த்தார். எனக்கு போன் செய்து மங்கத்தா படம் அருமையாக வந்துள்ளது என பாராட்டி விட்டு மீண்டும் மைசூருக்கு சென்று விட்டார்” என பிரேம்ஜி தெரிவித்திருப்பார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் சிம்பு, “மங்காத்தா படம் கொடுத்த அஜித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சத்யம் தியேட்டரில் ஒரு ரசிகனாக காலை 8 மணிக்கு முதல் காட்சி பார்த்தேன். அடுத்த காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் படிக்கட்டில் நின்று படம் பார்த்தேன். அப்படி ஒரு படம் பார்த்ததே இல்லை. தொடர்ந்து 2வது முறையாக பார்க்க வேண்டும் என மங்காத்தா படம் பார்க்கும்போது நினைத்தேன்.

ஒரு ரசிகராக இந்த படம் ஹிட்டாக வேண்டும் என நினைத்ததை பூர்த்தி செய்து விட்டார். வெங்கட்பிரபு மற்றும் அவரது குழுவுக்கு மிகப்பெரிய பாராட்டுகள். படத்தின் இசை, எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. ஒரு நடிகரின் 50வது படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு மங்காத்தா ஒரு எடுத்துக்காட்டு” என கூறியிருப்பார்.