யூத் படத்தின் கதையை சொன்னபோது தமிழில் உள்ள எந்த ஹீரோயின்களும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை என நடிகர் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் அசுரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விடுதலை படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஒரே நேரத்தில் ஹீரோவாகவும், இயக்குநராகவும் எண்ட்ரீ கொடுக்கிறார். யூத் என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி நடித்துள்ளார் கென். இந்த படம் மார்ச் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூத் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறை படத்தில் நடித்த அனிஷ்மா அனில்குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சூரஜ் வெஞ்சரமூடு, மீனாட்சி தினேஷ், தேவதர்ஷினி என பலரும் நடித்துள்ளனர்.

இதனிடையே ஒரு நேர்காணலில் பேசிய கென் கருணாஸ், “என்னிடம் நிறைய பேர் ஏன் நீங்கள் உங்கள் படத்துக்கு மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களை நடிக்க வைத்தீர்கள் என கேட்டார்கள். ஆனால் தமிழில் எந்த ஹீரோயினும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை. நான் நிறைய ஹீரோயின்களை நடிக்க வைக்க முயற்சித்தேன். இப்போது படம் நடித்து கொண்டிருக்கும் இளம் வயது நடிகைகளிடம் கூட கேட்டு பார்த்தேன். யாருமே என்னுடன் படம் பண்ண தயாராக இல்லை. அதேசமயம் நான் சொல்லும் கேரக்டரில் நடிக்கவும் ரெடியாக இல்லை. நான் ஏன் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும், இந்த கேரக்டர் பண்ணட்டுமா என கேட்கிறார்கள்.

ஆனால் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களிடம் ஈகோ என்பதே இல்லை. கதை சொல்லும்போதே அவர் தான் படத்தின் ஹீரோயின் நீங்கள் இல்லை என சொன்னால் பரவாயில்லை என கேரக்டர் பிடித்திருக்கிறது என்று நடிக்க வருகிறார்கள்.

இப்படியான நான் ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கும்போது சிறை படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியிடம் ஒருநாள் புலம்புவதற்காக சென்றேன். அவரிடம் என் படத்துக்கு ஹீரோயினும் கிடைக்க மாட்டேங்குது. கேட்குற ஹீரோயினும் நடிக்க மாட்டேங்குது என சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு சிறை படத்தில் இடம் பெற்ற நீலோத்தி பாடலை காட்டினார். அதில் அனிஷ்மாவைப் பார்த்து இந்த பொண்ணு சூப்பரா நடிக்கிறாங்க. என் படத்துல நடிப்பாங்களான்னு கேட்டு சொல்லுங்க என கூறினேன்.

அவர் அதை கேட்டு விட்டு இவரைப் பற்றி ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார். கண்ணாலேயே நடிப்பாங்க என்றெல்லாம் தெரிவித்தார். சரியென நானும் நேரில் சந்தித்து கதை சொன்னேன். பார்த்தால் அவரின் குரல் குழந்தை மாதிரி இருக்குது. இருந்தாலும் முழு கதையைக் கேட்டு விட்டு ரொம்ப நல்லாருக்கு. எனக்கு 2 நாட்கள் டைம் வேண்டும் என கேட்டு விட்டு அடுத்த நாளே ஓகே சொன்னார்” என கென் கருணாஸ் கூறியுள்ளார்.