நான் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் ஆடுவேன், அதன் விதிமுறைகள் எல்லாம் எனக்கு நன்றாக தெரியும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலில் கீர்த்தி சுரேஷிடம், நீங்கள் கேரளாவின் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறீர்கள். அதுபோக கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் ஒரு அணியின் பங்குதாரராக உள்ளனர். இப்போது மகளிர் கிரிக்கெட் அணியினர் உலகக்கோப்பை வென்றது எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

நானே ஒரு கிரிக்கெட் பிளேயர்

அதற்கு பதிலளித்த அவர், “ மகளிர் அணி கோப்பையை ரொம்ப சந்தோஷமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தேன். 11ஆம் வகுப்பு படிக்கும்போது தான் பள்ளியில் பெண்களுக்கென கிரிக்கெட் அறிமுகம் செய்தார்கள். எங்களுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் எல்லாம் நடைபெறும். அப்போது நான் திருவனந்தபுரத்தில் படித்தேன். எங்களுக்கு போட்டிகள் மதுரை மற்றும் காரைக்குடியில் நடந்தது.

அப்போட்டிகளில் நாங்கள் ஜெயித்து விட்டோம். அணியில் நான் தான் ஓபனிங் பேட்டராக இருந்தேன். தொழில்முறை கிரிக்கெட்டர் இல்லை என்றால் கிரிக்கெட்டின் விதிகள் எனக்கு தெரியும். ஓரளவு நன்றாக விளையாடுவேன். அதனால் கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பேன். சரியாக அதனை பின்பற்றுவேன். எனவே அடிக்கடி பெண்களுக்கு கிரிக்கெட்டில் ஏதாவது பெரிதாக இருக்க வேண்டும் என தோன்றிக்கொண்டே இருக்கும்.

அப்படியான நிலையில் இந்த முறை இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்ற மிக முக்கியமான நாள். பொதுவாக நான் எனக்கு பிடித்த விஷயத்தில் தான் பெரிதாக முதலீடு செய்வேன். அந்த மாதிரி தான் கிரிக்கெட்டில் முதலீடு செய்தேன். நானும் பிரியன் சாரும் இணைந்து முதலீடு செய்தோம். இதுதொடர்பாக கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்களின் கதைகளை கேட்டு வியந்துள்ளேன்.

கிரிக்கெட் வளர வேண்டும்

பொதுவாக ஆன்லைனில் மகளிர் கிரிக்கெட்டை பார்ப்பவர்கள் எண்ணிக்கை கம்மியாக இருக்கும். ஆனால் இம்முறை ஃபைனல் போட்டியைப் பார்த்தபோது ஆடவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போன்ற கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். அதேபோல் இந்திய அணி வீராங்கனை ஜெமிமா பேசியது ரொம்ப பிடிச்சிருந்தது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எங்களை கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இந்த மகளிர் கிரிக்கெட் ஆரம்பித்தபோது இருந்த மகளிர் அணியினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாடினர். அவர்களால் தான் இன்றைக்கு எங்களால் இதெல்லாம் பண்ண முடியுது. நாங்களும் எங்களுடைய எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடப்போம் என கூறியது சூப்பராக இருந்தது. கிரிக்கெட் மேலும் மேலும் வளர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது” என கீர்த்தி சுரேஷ் கூறினார்.

ரிவால்வர் ரீட்டா படம்

சுரேஷ் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டார். இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 28ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.