இந்திய திரைப்படத் துறையில் பணி நேரங்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதை நடிகை கீர்த்தி சுரேஷ் நேர்காணல் ஒன்றில் எடுத்துரைத்துள்ளார்.

நிலையான வேலை மாற்றம்

ரிவால்வர் ரீட்டா படம் தொடர்பான அந்த நேர்காணலில் பேசிய அவர், சினிமாவில் நிலையான வேலை மாற்றம் என்ற யோசனை ஒரு நடிகரின் வழக்கமான முழு யதார்த்தத்தையும் அரிதாகவே பிரதிபலிக்கிறது என்று கூறினார். மேலும், என்னுடைய ஒருநாள் அட்டவணை என்பது 9 மணி நேரம் தொடங்கி 17 மணி நேரம் வரை இருக்கும்.

நான் எல்லா வகையிலான ஷிப்டுகளிலும் பணியாற்றுகிறேன். நான் மகாநதி படம் செய்யும்போது ஒரே நேரத்தில் 5 படங்களிலும் கால்ஷீட் கொடுத்து பணியாற்றினேன். உதாரணமாக நீங்கள் 9 முதல் 6 வரை வேலை என்று சொல்லும்போது, 9 மணிக்கு நாம் ஒப்பனையுடன் தயாராக இருக்க வேண்டும். அதாவது 6.30 மணிக்குள் கிளம்ப வேண்டும், அதற்காக நாம் காலை 5.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். வெளிப்படையாக சொன்னால் ஓய்வெடுக்கக்கூட குறைவான நேரம் தான் கிடைக்கிறது.

மீண்டும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட 7 மணி ஆகி விடும். வீடு அல்லது ஹோட்டலுக்கு செல்ல 8 மணி ஆகும். தூங்க எப்படியும் 10,11 மணி வரை ஆகலாம். இப்போது மீண்டும் 5.30 மணிக்கு நாம் எழ வேண்டும். சில நேரங்களில் குறிப்பிட்ட நேரம் தாண்டி ஷூட்டிங் சென்றால் நிலைமை மோசமாகி விடும்.

லைட்மேன்கள் பாவம்

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சென்றால் நிலைமை படுமோசமாகி விடும். அதேசமயம் நடிப்பவர்களை விட ஷூட்டிங்கிற்கு எங்களுக்கு முன்பே வந்து பின்னர் பணி முடிந்து செல்லும் தொழிலாளர்களை நினைத்து பார்த்துங்கள்.அவர்கள் எல்லாம் எப்படியான கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. இதற்கிடையில் மலையாள சினிமா, அதன் தரமான படங்கள் வெளியீட்டிற்கு பெயர் பெற்றிருந்தாலும், பெரும்பாலும் சினிமா தொழிலாளர்களுக்கு ஆபத்தான அளவில் குறைந்த ஓய்வு நேரத்தை வழங்குவதாகவும் கீர்த்தி சுரேஷ் குற்றம் சாட்டினார்.

காரணம் மலையாள சினிமாவில் தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள். அவர்கள் அந்த அட்டவணைப்படி பணி செய்து 3 அல்லது 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள். லைட் மேன்கள் எல்லாம் 2 மணி நேரம் தான் தூங்குவார்கள். எனவே தூக்கம் ஒரு பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. தூக்கத்தை ஒழுங்குப்படுத்துவது என்பது ஆரோக்கியமான ஒழுங்குபடுத்துவதற்கான பணிச்சூழலை உருவாக்கும்.

உணவு, உடற்பயிற்சி போல தூக்கமும் அவசியமாகிறது. அந்த வகையில் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.