ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் கலக்கி வந்த மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா அழகியான காஷிஷ் மெத்வானி, தற்போது இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் அதிகாரியாகத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார். அழகுப் போட்டிகளில் இருந்து ராணுவத்திற்கு அவர் மாறிய இந்த பயணம், பலருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

யார் இவர்?

புனேவைச் சேர்ந்த காஷிஷ் மெத்வானி, அடிப்படையில் ஒரு சாஃப்ட்வேர் பொறியாளர் ஆவார். மாடலிங் மற்றும் ஃபேஷன் மீது கொண்ட ஆர்வத்தால் பல அழகுப் போட்டிகளில் பங்கேற்ற அவர், 2023ஆம் ஆண்டு 'மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா' பட்டத்தை வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச அழகுப் போட்டியிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஒருபுறம் மாடலிங் துறையில் ஜொலித்தாலும், சிறுவயது முதலே ராணுவத்தில் இணைய வேண்டும் என்பதே அவரது பெரும் கனவாக இருந்தது. இவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையின் வழியில் ராணுவ சீருடை அணிய ஆசைப்பட்ட காஷிஷ், கடினமான தேர்வுகளில் வெற்றி பெற்று சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA) சேர்ந்தார்.

அங்கு 11 மாதங்கள் கடுமையான ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், அண்மையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்று, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கேட் வாக் டூ ராணுவ ஒழுக்கம்

அழகு நிலையங்கள், கேட் வாக், ஃபோட்டோஷூட் என இருந்த தன் வாழ்க்கையை, கடுமையான உடற்பயிற்சி, துப்பாக்கிச் சூடு, ராணுவ ஒழுக்கம் என முழுமையாக மாற்றியுள்ளார் காஷிஷ். "அழகுப் போட்டிகளில் வென்றவர்கள் சினிமாவுக்கு அல்லது விளம்பரத் துறைக்குத்தான் செல்வார்கள்" என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து எறிந்துள்ளார் காஷிஷ்.

இவரது இந்த தைரியமான முடிவு, இன்றைய இளைய தலைமுறைப் பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இவருக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.