நடிகர் சூர்யா நடித்து ரிலீசாகாமல் இருக்கும் கருப்பு படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவின் கருப்பு படம்

நடிகரும், இயக்குநருமான் ஆர்.ஜே.பாலாஜி தற்போது கருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, இது அவரின் 45வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகிபாபு உள்ளிட்டோரும் கருப்பு படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் கருப்பு படம் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படத்தின் டைட்டில், பாடல்களும் வெளியாகி அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ரிலீஸில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கருப்பு படம் முதலில் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓடிடி விற்பனையில் சிக்கல் எழுந்ததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து 2025 கிறிஸ்துமஸ், 2026 பொங்கல் பண்டிகை என தொடர் விசேஷ நாட்கள் வந்தபோதும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் டென்ஷனாயினர். இதற்கிடையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருப்பு படம் ஓடிடி பிரச்னையில் சிக்கியுள்ளதாகவும், எதிர்பார்த்த தொகைக்கும் படம் விற்பனை செய்யப்படாததால் ரிலீசாகாமல் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

கடைசியாக சூர்யா நடித்த கங்குவா, ரெட்ரோ ஆகிய இரு படங்களும் படுதோல்வியடைந்தன. இதனால் கருப்பு படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நேரலையில் புலம்பிய ஆர்.ஜே.பாலாஜி

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து - இந்தியா இடையேயான இறுதி ஆட்டம் மார்ச் 8ம் தேதியான நேற்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வர்ணனையில் ஆர்.ஜே.பாலாஜி இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை ஐபிஎல் தொடரில் சென்னை அணி ரிலீஸ் செய்து விட்டது. ஆனால் நான் எடுத்த கருப்பு படம் எப்போது ரிலீஸ் ஆகும்ன்னு தெரியலையே என தனது ஆதங்கத்தை ஆர்.ஜே.பாலாஜி பதிவு செய்துள்ளார்.

இப்படியான நிலையில் கருப்பு படம் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் இந்த படத்தின் ஓடிடி விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தையை முடிக்க பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் வரும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு மே 1ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி நடிகர் தனுஷ் நடிக்கும் கர படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சூர்யா - தனுஷ் படங்கள் 3வது முறையாக மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.