Karuppu First Day Box Office Collection: சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான கருப்பு திரைப்படம், இந்தியாவில் மட்டும் 16 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

கருப்பு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்:

பல்வேறு தடைகள் மற்றும் திட்டமிட்டபடி கடந்த 14ம் தேதி வெளியிட முடியாதது போன்ற பிரச்னைகளை கடந்து, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமர்ஷியல் கதையில், கிராமத்து கடவுளான கருப்பின் பங்களிப்பை சேர்த்து, கோர்ட் ட்ராமா மசாலா படமாக கருப்பு வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையரங்குகளில் வெளியாகி ஹிட் படத்தை வழங்க முடியாமல் தவித்து வந்த சூர்யாவிற்கு இது வெற்றி படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக கருப்பு அமைந்துள்ளதாக விமர்சகர்களும் பேசி வருகின்றனர். அதனை உணர்த்தும் விதமாகவே படத்தின் முதல் நாள் வசுலே 20 கோடி ரூபாயை கடந்துள்ளது.

கருப்பு படத்தின் வசூல் விவரம்:

கருப்பு திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் ஓடியுள்ளது. அதன் மூலம் 20 கோடியே 66 லட்சம் ரூபாயை முதல் நாளிலேயே வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே சுமார் 16 கோடியே 66 லட்சம் ரூபாய் அடங்கும் எனவும், வெளிநாடுகளில் சுமார் 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் முதல் நாளில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 2 கோடியே 75 லட்சம் ரூபாயும், கர்நாடகாவில் 2 கோடி ரூபாயும், கேரளாவில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயும், நாட்டின் பிற பகுதியில் இருந்து 16 லட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது. இந்த தகவலானது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தரவுகள் அடிப்படையில், திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை தெரிவிக்கும் சாக்னில்க் தளத்தை அடிப்படையாக கொண்டதாம்.