இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தனித்துவமான சிறப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் மாதங்களில் 8வது மாதமாக வரும் வரும் இம்மாதம் ஆன்மிக மாதமாக அறியப்படுகிறது. சபரிமலை சீசன், முருகன் கோயிலுக்கு மாலையிட்டு பாதயாத்திரை செல்லுதல், கார்த்திகை தீபம் என இந்த மாதம் ஆன்மிக மாதமாகவே பார்க்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் நாள் “திருக்கார்த்திகை” பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

தினசரி தீபமேற்றினால் பலன்கள்

அதேசமயம் தினமும் அகல் விளக்கில் நம்முடைய வீடுகளில் இந்த மாதம் முழுவதும் தீபமேற்றி வைத்திருப்பதைக் காணலாம். இதனை பாரம்பரியமாக பின்பற்றியும் வருகிறார்கள்.

இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது பற்றி ஆன்மிக ரீதியாக நம்பிக்கையின்படி சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் மிக புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என நம்பப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் நாம் தீபமேற்றி வழிபட்டால் எண்ணிய விஷயங்கள் யாவும் ஈடேறும் என்பது ஐதீகமாகும்.

அந்த வகையில் வீட்டின் வாசற்படியில் இருபுறமும் பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் மாலையில் பிரதோஷ நேரமாக அறியப்படும் 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் கல்வி வளர்ச்சியாகும். திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும் என்பது ஐதீகமாகும். அதேசமயம் மாலை 6.30 மணிக்கு கண்டிப்பாக அனைவரும் தங்கள் வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

காலையில் விளக்கு வைக்க முடியாதவர்கள் மாலையில் வைக்கலாம். எக்காரணம் கொண்டும் விளக்கை குளிர வைக்கும்போது கையால் அணைக்கக்கூடாது. பூவைக் கொண்டும் அல்லது விளக்கின் திரியை எண்ணெயில் இழுத்தும் இதனை மேற்கொள்ளலாம்.

தீபமேற்ற தூய்மையாக, சேதமில்லாத அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும். சிறியது முதல் பெரியது வரையிலான அகல் விளக்கை பயன்படுத்தலாம். முடிந்தவரை இரண்டு திரிகள் பயன்படுத்த வேண்டும். பஞ்ச முக விளக்காக இருந்தால் 5 திரிகள் பயன்படுத்தலாம். இந்த தீபமேற்ற நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.

மாதம் 30 நாட்களும் காலை அல்லது மாலை வேளைகளில் வீட்டின் வெளியே மற்றும் உள்ளே (பூஜையறையில்) விளக்கேற்றி வழிபட்டால் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் என்பது நம்பிக்கையாகும். மேலும் குழந்தை பேறு, பணியில் முன்னேற்றம், வியாபார வளர்ச்சி, சொந்த வீடு, நிலம், வாகனம் வாங்குதல் உள்ளிட்ட பலவிதமான முன்னேற்றம் இருக்கும் என்பது ஆன்மிக ரீதியாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

கடந்த முறை பயன்படுத்திய அகல் விளக்கை பயன்படுத்தாமல் முடிந்தவரை புதிதாக வாங்கி உபயோகிக்கவும். இந்நாளில் நாம் கோயிலுக்கு சென்றும் தீபமேற்றி வழிபடலாம். அதன்படி மகாலட்சுமி என்றால் 8, சிவனுக்கு 3 அல்லது 9 தீபமேற்றலாம். மேலும் விநாயகருக்கு 7ம், முருகனுக்கும் 6ம், அம்மனுக்கு 2 தீபமேற்றி வழிபடலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.