Pongal Kappu Kattu 2026: "பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் இன்றைய தினம் போகிப் பண்டிகையாக அன்று தோரணங்களால் அலங்கரித்து காப்புக்கட்டுவார்கள்"

தமிழர் பண்டிகை

ஒரு இனமே இணைந்து கொண்டாட கூடிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது 'காப்பு கட்டுதல்' என்பது ஒரு மிக முக்கியமான மரபாகும். பொதுவாக போகிப் பண்டிகை அன்று வீட்டின் நிலவாசல் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்தக் காப்பு கட்டப்படுகிறது. ஒரு சில பகுதிகளில், தை ஒன்றாம் தேதியும் இந்த காப்பு கட்டும் சம்பிரதாயம் கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது

காப்பு கட்டுதல் என்றால் என்ன?

பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாக, தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும், மங்கலம் பெருகவும் செய்யப்படுவதே காப்பு கட்டுதல் ஆகும். இதில் பெரும்பாலும் பின்வரும் செடிகள் பயன்படுத்தப்படுகின்றன:

ஆவாரம்பூ: நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கிறது.

சிறுபீளை (பூப்பொங்கல் பூ): இது ஒரு மூலிகைச் செடி.

வேப்பிலை: கிருமிநாசினியாகவும், தீய சக்திகளை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது.

பிரண்டை - நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என நம்பப்படுகிறது

தர்ப்பை புல்: தூய்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது, தீய சக்திகள் வீட்டை நெருங்காது என்பது நம்பிக்கையாக உள்ளது. (ஒரு சில இடங்களில் தர்ப்பை புல் காப்பு கட்டும் போது பயன்படுத்துவதில்லை) இந்த பொருட்கள் எல்லாம் காப்பு கட்டும்போது பயன்படுத்தப்படும்.

காரணங்கள் என்னென்ன?

வீட்டின் வாசலில் காப்பு கட்டுவது, எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் ஒரு "பாதுகாப்பு அரணாக" கருதப்படுகிறது. புதிய அறுவடைக்காலம் தொடங்கும் போது, வீடு மங்கலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.

காப்பு கட்டப் பயன்படுத்தப்படும் வேப்பிலை மற்றும் ஆவாரம்பூ ஆகியவை சிறந்த கிருமிநாசினிகள். தை மாதத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் வரும் கிருமிகளை இவை தடுக்கின்றன.

சிறுபீளை செடி சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது. இந்தச் செடிகள் வாசல் ஓரத்தில் இருக்கும்போது, காற்றுடன் சேர்ந்து வரும் நன்மைகள் ஆரோக்கியத்தைத் தரும். அந்தக் காலத்தில் தொற்று நோய்கள் பரவும் போது, வீட்டில் காப்பு கட்டியிருந்தால் "அந்த வீட்டிற்குள் அந்நியர்கள் வர வேண்டாம்" அல்லது "வீட்டில் நோயாளிகள் இருக்கிறார்கள்" என்பதைக் குறிக்கும் அடையாளமாகவும் இது பயன்பட்டது.

விவசாய நிலங்களில் இருந்து அறுவடைக்குப் பிறகு வரும் பூச்சிகள் மற்றும் விஷ வண்டுகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, இந்த மூலிகைகளின் மணம் உதவுகிறது. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கு ஏற்ப, தீயவற்றை அகற்றி நல்லவற்றை வரவேற்பதையே இந்தக் காப்பு கட்டுதல் அடையாளப்படுத்துகிறது.