இயக்குநர் முகேஷ் குமார் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக நடித்திருக்கும் கண்ணப்பா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றம் செய்தும் பிறகு படத்தின் முக்கிய காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாகவும் செய்திகள் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கண்ணப்பா திரைப்படம் இன்று பல மொழிகளில் வெளியானது. இப்படத்தை நடிகரும், விஷ்ணு மஞ்சுவின் தந்தையுமான மோகன் பாபு வெளியிட்டுள்ளார்.

சிவனின் பக்தன் கண்ணப்பா

சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இப்படத்தின் இயக்குநர் முகேஷ் குமார் மகாபாரதம், ராமாயணம் போன்ற வரலாற்று தொடர்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட கண்ணப்பா படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாசிட்டிவான கருத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விமர்சனத்தை இங்கு காணலாம்.

ட்விட்டர் விமர்சனம்

வேடர் குலத்தை சேர்ந்த கண்ணப்பன் சிவனின் கண்களில் ரத்தம் வழிவதை பார்த்து தனது கண்ணை பிடுங்கி தானமாக வழங்கியதாக வரலாறு குறிப்பிடுகிறது. அதேபோன்று நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பனாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனதாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் தனது கண்களை அம்ப வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சியை கண்டு Goosebumps ஆகிவிட்டது எனவும் பாசிட்டிவாக கருத்து தெரிவிக்கின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக பாராட்டினார். அதையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

பிரபாஸ் நடிப்பு எப்படி இருக்கிறது?

கண்ணப்பா படத்தில் அக்ஷய்குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதியாகவும் நடித்துள்ளனர். மோகன்லால் கேமியோவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோன்று நடிகர் பிரபாஸ் இப்படத்தில் வரும் 20 நிமிட காட்சிகளும் பட்டாஸ் வெடிக்கிறது. படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் சிவனின் திருவிளையாடலுக்காக கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்படும் நபராக பிரபாஸ் வருகிறார். அவர் வந்தாலே மனசெல்லாம் என்னமோ மாதிரி இருப்பதாக ரசிகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் புராண கதைகள்

தமிழ் சினிமாவில் 90களில் பாளையத்து அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற தெய்வ படங்கள் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தன. இப்படத்தை தாய்மார்கள் அதிகம் ரசித்து பார்த்தார்கள். புராண கதைகளை பொருத்தவரை தமிழ் சினிமாவில் குறைவு தான்.ஆனால், தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக புராண கதைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ராமன், ஹனுமான் மற்றும் வரலாற்று கதைகளை படமாக எடுத்து வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் கண்ணப்பா திரைப்படம் இடம்பிடித்திருக்கிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமாக இருக்குமா என்பதை ரசிகர்களின் வரவேற்பை பொறுத்தே பார்க்க வேண்டும். இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன.