தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த செங்கோட்டையனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பக்கம் ஒலித்த விசில்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. 4 முனை போட்டி நிலவிய நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அதேசமயம் முதல்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று மாஸ் காட்டியுள்ளது. கிட்டதட்ட திமுக, அதிமுக இல்லாத ஒரு கட்சியின் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அடுத்த 5 ஆண்டுகளை கடக்கப் போகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய்க்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் வெற்றி பெற்ற பிற சிறிய கட்சிகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.

அதற்காக க்ரீன் சிக்னலும் எதிர்தரப்பில் இருந்து கிடைக்கப் பெற்றிருக்கிறது. தமிழக மக்கள் தங்களின் அமோக ஆதரவை விஜய் என்ற ஒன்றை மனிதருக்காக வழங்கியுள்ளனர். அவர் கட்சியின் விசில் சின்னம் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துள்ளது.

முதலமைச்சராக நாளை பதவியேற்பு

இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தங்களை பதவியேற்க அழைக்குமாறு விஜய் ஆளுநர் அர்லேக்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்கும் விழாவை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

துணை முதலமைச்சராகும் செங்கோட்டையன்

இந்த நிலையில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யாருக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்கிற உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என முன்னதாக விஜய் தெரிவித்திருந்த நிலையில், ஒருவேளை ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கும் அவர் அமைச்சரவையில் பொறுப்பு வழங்கலாம் என சொல்லப்படுகிறது.

விஜய் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களை வீழ்த்திய எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி கே.ஏ.செங்கோட்டையன், சத்யபாமா, வி.எஸ்.பாபு, டி.கே.பிரபு, விஜயலட்சுமி, இசிஆர் சரவணன், சபரிநாதன் உள்ளிட்ட பலரும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் செங்கோட்டையனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயன்றது. ஆனால் தமிழக அரசியலில் மிக நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையன் சற்றும் எதிர்பாராத வகையில் தவெகவில் இணைந்தார். அதனைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

கொங்கு மண்டலத்தை தன் கையில் எடுத்த செங்கோட்டையனுக்கு அங்குள்ள மாவட்டங்களின் வெற்றி கைகொடுத்தது. அதன்படி கோவையில் 10ல் 6 தொகுதிகளும், திருப்பூரில் 8ல் 4 தொகுதிகளும், ஈரோட்டில் 8ல் 5 தொகுதிகளையும், சேலத்தில் 11ல் 4 தொகுதிகளையும், நாமக்கலில் 6ல் 5 தொகுதிகளையும் தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றியது. செங்கோட்டையன் தான் விஜய் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என உறுதியாக கணித்திருந்தார். அந்த மாற்றம் நிகழ்ந்து விட்ட நிலையில் அதற்கு பரிசாக துணை முதல்வர் பதவியை அளிக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையனைப் போல ஒரு நீண்ட அனுபவம் கொண்ட ஒரு தலைவர் தன்னுடன் இருந்தால் ஆட்சியை சரியாக கையாள முடியும் என விஜய் எண்ணுவதாக தவெக தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.