நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் ரிலீசுக்கு முன்பே வெளியானது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதுதொடர்பாக மத்திய தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது.

விஜயின் கடைசிப்படம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் 69வது படமாக உருவானது “ஜனநாயகன்”. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல் என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்த இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியானது. மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு ஜனநாயகன் தான் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

சோதனை மேல் சோதனை

இப்படியான நிலையில் தான் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக படம் பார்த்த தணிக்கைத்துறை அதிகாரி ஒருவர் புகார் அளித்ததாக சொல்லப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கதவுகளை கேவிஎன் நிறுவனம் தட்டியும் ஆதரவாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் விதிகள் காரணமாக ஜனநாயகன் படம் பற்றி எவ்வித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. படம் மே 4க்கு பின் வெளியாகும் என கூறப்பட்டது.

இணையத்தில் வெளியான ஜனநாயகன்

இப்படியான நிலையில் ஜனநாயகன் படம் திடீரென இணையத்தில் திருட்டு தனமாக வெளியாகியுள்ளது. அதுவும் ஹெச்.டி. தொழில்நுட்பத்தில் வெளியானதால் படக்குழு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். முதல் 5 நிமிட காட்சி என தகவல் வெளியான நிலையில் 3 மணி நேர படமும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தணிக்கை வாரியத்தின் செயல் என ஒருபுறமும், மறுபுறம் அரசியலுக்காக விஜயே இப்படிப்பட்ட வேலையே செய்கிறார் என மறுபுறமும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கைத்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திலிருந்து (CBFC) 'ஜன நாயகன்' தமிழ்த் திரைப்படம் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்குத் திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையைப் பின்பற்றப்படுகிறது. அதன்படி படத்தைக் காண பாஸ்வேர்ட் மூலம் மட்டுமே நம்மால் உட்செல்ல இயலும்.

மேலும் இந்த KDM திரைப்படத் தயாரிப்பாளரிடமே முழுமையாக இருக்கும். KDM பாஸ்வேர்ட் இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ பார்க்கவோ முடியாது. 'ஜன நாயகன்' திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு மார்ச் 17 அன்று மும்பையில் உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அது அன்று முதல் அவர்களிடமே உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பட ரிலீஸூக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சென்சார் வாரியம் தெரிவித்துள்ளது.