தமிழ் சினிமாவில் ஜனநாயகன் படத்துக்கு எதிராக பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் விஜய் மீது மிகப்பெரிய விமர்சனம் எழுந்துள்ளது.

ஜனநாயகன் vs பராசக்தி

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி, நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் இனிமேல் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும்,ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதேசமயம் 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியாகவுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரவி மோகன், அதர்வா முரளி போன்றோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பராசக்தி படம் முதலில் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதால் ஜனவரி 10ம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது.

விஜயை கிழித்தெறியும் ரசிகர்கள்

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக சிவகார்த்திகேயன் படம் வெளியாவது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகன், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்த நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் ஜனவரி 3ம் தேதி ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகவுள்ளது.

இப்படியான நிலையில் விஜய் தனது கடைசிப் படம் என அறிவித்தப் பிறகு அவருக்கு மரியாதை கொடுக்காமல் சிவகார்த்திகேயன் படத்தை வேண்டுமென்றே களமிறக்குகிறார்கள் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதன் எதிர்வினை தியேட்டரில் எதிரொலிக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் விஜய் பற்றிய மற்றொரு தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2000ம் காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாற தொடங்கியது. அப்போது உச்ச நட்சத்திரங்களாக ரஜினி, கமலுக்கு பிறகு விஜய் - அஜித்குமார் மாற தொடங்கினர்.அப்போது விஜய், அஜித் படங்கள் தான் ஒரே நாளில் ரிலீசாகும். இந்த நிலையில் 2004ம் ஆண்டு விஜய் தனது சச்சின் படத்தை ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தோடு மோதவிட்டார். இதன் பின்னால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பதாக கூறப்பட்டாலும், இந்த முடிவு அப்போது ரஜினி, கமல் ரசிகர்களை ஆத்திரமூட்டியது.

அதேசமயம் 2019ம் ஆண்டு அஜித் தனது விஸ்வாசம் படத்தை, ரஜினி நடித்த பேட்ட படத்துடன் களமிறக்கினார். அப்போது ரஜினி ரசிகர்கள் அப்செட்டாகினர். எனினும் சமூக வலைத்தளத்தில் இந்த அளவு கொந்தளிக்கவில்லை. ரஜினிக்கு எதிராக 2004ல் மோதும்போது உங்களுக்கு இனித்தது, அதுவே உங்களுக்கு எதிராக சிவகார்த்திகேயன் படம் வந்தால் கசக்கிறதா என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.