Isha Foundation: ஈஷா மையம் மீது கடந்த 15 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈஷா மையம் மீது குற்றச்சாட்டு:

நாடு முழுவதும் அறியப்படும் சத்குருவின் ஈஷா யோகா மையம், கோவையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு நடைபெறும் சிவராத்திரி போன்ற கொண்டாட்ட்டங்களுக்கு திரவுபதி முர்மு உள்ளிட்ட, நாட்டின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் வருகை தருகின்றனர். அதேநேரம், இந்த மையம் தொடர்பாக பல சர்ச்சைகளும் நிலவுகின்றன. அந்த வகையில் தான், ஈஷா யோகா மையத்தில் தன்னுடைய இரண்டு மகள்களும் மூளை சலவை செய்யப்பட்டு, அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருப்பதாக பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஈஷா யோகா மையத்தில் ரெய்டு:

விசாரணையின் முடிவில், ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினரும் சமூக நலத்துறை அதிகாரிகளும், கடந்த அக்டோபர் 1 2 ஆகிய தேதிகளில் ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈஷா மையம் உச்சநீதிமன்றத்தை நாடி காவல்துறையினர் விசாரணை நடத்த தடை வாங்கியது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி., ஈஷா யோகா மையம் தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.

15 ஆண்டுகால வழக்கு விவரங்கள்:

காவல்துறை சமர்பித்துள்ள 23 பக்க அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா மையம் மீது குவிந்த புகார்கள் வழக்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பலரும் காணாமல் போய்விட்டனர், ஈஷா யோகா மையத்திலேயே தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, ஈஷா யோகா மையம் நடத்தும் மருத்துவமனையில் காலாவதியான மற்றும் போலியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளில் மொத்தம் 6 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஐந்து வழக்குகள் மேல் நடவடிக்கை இன்றி கைவிடப்பட்டதாக முடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174 கீழ் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் இரண்டு வழக்குகள் தடயவியல் ஆய்வக அறிக்கை இல்லாததால் விசாரணையில் உள்ளன.

அறக்கட்டளையால் கட்டப்பட்டு வரும் மயானத்தை அகற்றக் கோரி பக்கத்து வீட்டுக்காரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய வழக்கு நிலுவையில் உள்ளது.

'ஈஷா அவுட்ரீச்' நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மீது உள்ளூர் பள்ளி முதல்வர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட, POCSO வழக்கின் கீழ் மருத்துவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததற்காக ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்கும் விசாரணையில் உள்ளது