IPL 2026 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026 ஏலம் - 1355 வீரர்கள்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை வாங்க பல்வேறு அணி நிர்வாகங்களும் தற்போதே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 355 வீரர்கள் தங்களது பெயரை இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 25 வீரர்கள் இடம்பெறலாம். அதனடிப்படையில் மினி ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கப்பட்ட வீரர்கள் அடிப்படையில், இன்னும் 10 அணிகளிலும் சேர்த்து 77 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஏலமானது டிசம்பர் 16ம் தேதியன்று அபுதாபியில் நடைபெற உள்ளது.

க்ரீனுக்காக சென்னை Vs கொல்கத்தா?

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை இந்த நீண்ட பட்டியலில் நட்சத்திர வீரர்களின் பெயர்கள் அதிகளவில் இல்லை. காரணம் அவர்களில் பெரும்பாலானோர் தங்களது அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தேர்வு செய்ய சில லாபகரமான வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். காயம் காரணமாக 2025 மெகா ஏலத்தில் பங்கேற்காத ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிரீன், ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். தகவல்களின்படி, ஏலத்திற்கு முன்பாக அதிககையிருப்பை கொண்டிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.3 கோடி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (43.4 கோடி) அணிகள், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுக்க கடுமையாக போரிட வாய்ப்புள்ளது.

கவனத்தை ஈர்க்கும் வீரர்கள்:

இந்த மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மீது அணி நிர்வாகங்கள் அதிகை தொகையை செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 சீசனுக்கு முன்னதாக நடந்த மெகா ஏலத்தில் ரூ.13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பதிரனாவை சென்னை அணி தற்போது விடுவித்துள்ளது. அவரை இந்த முறை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 8.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனும் நல்ல ஃபார்மால் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த மெகா ஏலத்தின் போது ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யரும் இந்த முறை ஏலத்திற்கு வந்துள்ளார். லக்னோ அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரவி பிஷ்னாயும் பெரிய தொகைக்கு ஏலம்போகக் கூடும். அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன மேக்ஸ்வெல் இந்த ஏலத்தில் தனது பெயரை சேர்க்கவில்லை.

ரூ.2 கோடி அடிப்படை தொகை பிரிவு வீரர்கள்:

ரூ.2 கோடியை அடிப்படை ஏலத்தொகையாக கொண்ட வீரர்களின் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். அதில் வெங்கடேஷ் அய்யர் மற்றும் ரவி பிஷ்னோய் அடங்குவர். இதுபோக முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், சீன் அபோட் , ஆஷ்டன் அகர், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் , கேமரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலிஸ் , ஸ்டீவ் ஸ்மித் , பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டோன், ஃபின் ஆலன் , மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே ,ரச்சீன் ரவீந்திரா, டேவிட் மில்லர், நிகிடி, நோர்ட்ஜே, ஹசரங்கா பதிரனா, தீக்ஷனா , ஜேசன் ஹோல்டர் , ஷாய் ஹோப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அடங்குவர்.