ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்று சென்னை, பெங்களூர் அணிகள். இந்த தொடரில் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பெங்களூர் அணி டெல்லியுடனும், வெற்றி, தோல்வி என மாறி, மாறி பயணித்து வந்த சென்னை நேற்று ஹைதரபாத்துடனும் மோதியது.

இறுதிவரை போராடி ஆர்சிபி தோல்வி:

ஒரே நாளில் இந்த இரண்டு அணிகளும் வேறு வேறு அணிகளுடன் மோதியதால் இரு அணி ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். இந்த சூழலில், மாலையில் முதலில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியபோது அபாரமாக தொடங்கியது. 200 ரன்களைக் கடக்க வேண்டிய போட்டியில் பின்வரிசையில் ஜிதேஷ், ஷெப்பர்ட், ஆகியோர் பெரியளவு சோபிக்காததால் 176 ரன்களையே இலக்காக நிர்ணயித்தனர்.

சின்னசாமி போன்ற சிறிய மைதானத்தில் இந்த இலக்குடன் போராடிய ஆர்சிபி 18 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கே.எல்.ராகுல் - ஸ்டப்ஸின் பொறுப்பாக ஆடினார். இருப்பினும், புவனேஷ்வர், குருணல் பாண்ட்யாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. மில்லரின் அதிரடி, ஸ்டப்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசியில் 1 பந்து மீதம் வைத்து டெல்லி வென்றது.

சென்னையும் தோல்வி:

இதையடுத்து, ஹைதரபாத்தில் சன்ரைசர்சுடன் சென்னை அணி மோதியது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியாக 59 ரன்களை குவிக்க, கிளாசென் 59 ரன்களை இறுதியில் விளாச சென்னைக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதரபாத்.

சாம்சன், ருதுராஜ், மாத்ரே, மேத்யூ ஷார்ட், சர்ப்ராஸ், துபே, ப்ரெவிஸ் என பேட்டிங் பலமாக கொண்ட சென்னை இளம் பந்துவீச்சாளர்களை கொண்ட ஹைதரபாத்தை எளிதில் வீழ்த்தும் என்றே பலரும் கருதினர். ஆனால், நிதிஷ்ரெட்டி சாம்சனை 7 ரன்னில் அவுட்டாக்க, அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே 13 பந்தில் 30 ரன்னில் வெளியேற கேப்டன் ருதுராஜும் 19 ரன்னில் அவுட்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரெவிஸ் டக் அவுட்டாக, கடைசியில் ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட 7 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுக்க 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரு அணி ரசிகர்களும் ஏமாற்றம்:

தங்களுக்கு மிகவும் பிடித்தமான அணிகள் வெற்றி பெறும் என்று ஆவலுடன் காத்திருந்த சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய 2 அணிகளும் நேற்று தோல்வி அடைந்ததால் அந்த அணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தற்போதைய புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் தோல்வியே சந்திக்காமல் முதலிடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி 7வது இடத்தில் உள்ளது.

லீக் சுற்றின் முதற்கட்ட போட்டிகள் ஓரளவு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளின் முடிவில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது யார்? என்பது தெரிய வரும்.