<p>சேலம் மாநகர க்ரைம் பிரிவு ஆய்வாளர் ஆய்வாளராக பணியாற்றியவர் கணேசன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது நிலப் பிரச்சனை ஒன்றில் அப்போதைய திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சண்முக சுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளராக இருந்த கணேசன் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. மேலும் பழனி டவுன் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரும் லஞ்சம் கேட்கும் வீடியோ பரவத் தொடங்கின. காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. </p>
<p>இது தொடர்பான விசாரணைகளில் தற்போதைய சேலம் மாநகர க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் புகார் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு க்ரைம் பிரிவு ஆய்வாளர் கணேசன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகளை நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா, ஆய்வாளர் கணேசன் பணி நீக்கம் செய்து உத்தரவினை பிறப்பித்தார். அதன்படி சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, பணி நீக்கத்திற்கான ஆணையை ஆய்வாளர் கணேசனிடம் வழங்கினார்.</p>
<p>2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் விசாரணை முடிந்து காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>