பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ பலம் குறித்து தெரிந்து கொள்வோம்.

பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் திடீரென பட்டப்பகலில் உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 25 குடிமக்களும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா எப்போது பதில் தாக்குதலை நடத்தும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் இந்தியா நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீது எந்தவித தாக்குதல் நடத்தவில்லை, என இந்திய அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

India VS Pakistan ராணுவ பலம் என்ன ?

உலக அளவில் இந்திய ராணுவம் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் 12வது இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 252 கடற்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானை பொறுத்தவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 கடற்படை வீரர்கள் உள்ளனர். இந்தியாவிடம் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானிடம் 78 ஆயிரத்து 128 விமானப்படை வீரர்களே உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை 21,97,117 ராணுவ வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை 13,11,500 ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 25 லட்சத்தி 27 ஆயிரம் துணை இராணுவ படையினர் உள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை சுமார் 5 லட்சம் துணை ராணுவ படையினர் உள்ளனர்.

கூடுதல் தகவல்கள் என்னென்ன ?

இந்தியாவிடம் 2229 விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 1399 விமானங்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவிடம் 513 போர் விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 328 போர் விமானங்கள் உள்ளன. இந்தியாவிடம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்தியாவிடம் தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் 80 உள்ளன. பாகிஸ்தானிடம் 57 தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

இந்தியாவிடம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 594 கவச வாகனங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 17,516 கவச வாகனங்கள் உள்ளன. பீரங்கி மற்றும் பீரங்கி வாகனங்கள் 4201 இந்தியாவிடம் உள்ளன. பாகிஸ்தானிடம் 2,627 பீரங்கிகள் உள்ளன. இதேபோன்று இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல்கள் 18 உள்ளது. பாகிஸ்தானிடம் 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

அணு ஆயுதங்கள் ?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அணு ஆயுதம் குறித்த, வெளிப்படையான தகவல்கள் இல்லை என்பதே இது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படாது என்பதே கருத்தாக உள்ளது.

Date Source: Data Fire Power