IND W vs IRE W: அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.

ஸ்மிரிதி - ப்ரதிகா அதிரடி:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் இந்தியாவிற்காக சிறப்பாக ஆடிய ப்ரதிகா ராவல் - ஸ்மிரிதி மந்தனா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடினார்.

குறிப்பாக, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினார். அவருக்கு ப்ரதிகா ராவலும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இவர்களைப் பிரிக்க கேப்டன் கேபி அயர்லாந்து அணியின் பந்துவீச்சை முழுவதும் பயன்படுத்தினார். ஆனாலும், இவர்களது அதிரடியால் ரன் மளமளவென எகிறியது. அணியின் ஸ்கோர் 18 ஓவர்களிலே 150 ரன்களை கடந்தது.

ஹர்லீன் தியோல் - ஜெமிமா

அணியின் ஸ்கோர் 156 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா அவுட்டானார். அவர் 54 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலே மறுமுனையில் அதிரடியாக ஆடிய ப்ரதிகா ராவலும் அவுட்டானார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்தியாவை எளிதில் சுருட்டிவிடலாம் என்று எண்ணிய அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து வந்த ஹர்லீன் தியோல் - ஜெமிமா ஜோடி ரன்மழை பொழிந்தனர்.

இருவரும் இணைந்து மாறி, மாறி பவுண்டரிகளை விளாசினார். அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். ஓர்லா, அவா கேன்னிங், ஆர்லீனா கெல்லி, ப்ரெயா, அலானா, ஜார்ஜினா என யார் பந்து வீசினாலும் இவர்கள் ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தனர். இதனால், இந்திய அணி 300 ரன்களை கடந்த முன்னேறியது.

ஜெமிமா சதம்:

அதிரடியாக ஆடி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ஹர்லீன் தியோல் அர்லீனா கெல்லி பந்தில் அவுட்டானார். அவர் 84 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெமிமா சதம் அடித்தார். அவர் 91 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் எடுத்தது.

அயர்லாந்து அணியில் அர்லீனா கெல்லி 10 ஓவர்கள் வீசி 82 ரன்களை வாரி வழங்கினார். ஓர்லா 8 ஓவர்களில் 75 ரன்களும், ப்ரெயா 9 ஓவர்களில் 77 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.