இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டனில் நடந்து வந்த நிலையில், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

124 ரன்கள் டார்கெட்:

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 153 ரன்களில் அவுட்டாக இந்தியாவிற்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்ததால் ஜான்சென், ஹார்மர், கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் மிரட்டினர்.

இளம் வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக, அனுபவ வீரர் கே.எல்.ராகுல் 1 ரன்னில் நடையை கட்டினார். இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் நிதானம் காட்ட அவருக்கு ஒத்துழைப்பு தர முயற்சித்த துருவ் ஜோரல் 13 ரன்களில் அவுட்டானார். காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி முதல் இன்னிங்சில் சொதப்பிய ரிஷப் பண்ட் 2 ரன்னில் அவுட்டானார்.

93 ரன்களுக்கு ஆல் அவுட்:

38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் பறிபோன நிலையில், ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடியதால் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. இந்திய அணி 64 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிய ஜடேஜா 18 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் தனி ஆளாக போராடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டாக 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

அதன்பின்பு டெயிலண்டர்களை வைத்துக்கொண்டு அக்ஷர் படேல் போராடினார். குல்தீப் யாதவ் 1 ரன்னில் அவுட்டாக அக்ஷர் படேல் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். காயம் காரணமாக கடைசி வரை கேப்டன் கில் களமிறங்காததால் இந்திய அணி 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

15 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி:

இதனால், தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹார்மர் 14 ஓவர்களில் 4 ஓவர்களை மெய்டனாக வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சென் 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், மார்க்ரம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் இந்திய அணி சொந்த மண்ணில் இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்திருப்பது ரசிகர்களை வேதனை அடையவைத்துள்ளது. மேலும், பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. சவாலான மற்றும் கடினமான மைதானங்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இந்த போட்டியில் கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், ஜடேஜா, பும்ரா, சிராஜ் சீனியர் வீரர்கள் இருந்தும், சுப்மன்கில் ஜெய்ஸ்வால், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் என திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி அடைந்தது.