இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடக்கிறது. இங்கிலாந்தின் பழமையான மற்றும் புகழ்பெற்ற மைதானத்தில் கென்னிங்டன் ஓவலும் ஒன்றாகும்.

மைதானம் எப்படி?

இந்த கென்னிங்டன் ஓவல் மைதானம் கடந்த 1845ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மைதானத்தில் 23 ஆயிரத்து 500 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இங்கிலாந்தின் கவுன்டி கிளப் அணியான சர்ரேவிற்கு இந்த மைதானமே சொந்த மைதானம் ஆகும்.

இந்த மைதானத்தில் இதுவரை 112 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 42 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட் செய்த அணி 30 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் சராசரி ரன்கள் 338 ஆகும். 2வது இன்னிங்சில் 300 ரன்கள் சராசரி ஆகும். 3வது இன்னிங்சில் 237 ரன்கள் சராசரி ஆகும். 4வது இன்னிங்சில் 156 ரன்கள் சராசரி ஆகும்.

அதிகபட்சம் - குறைந்தபட்சம் எப்படி?

இந்த மைதானத்தில் அதிபட்சமாக 1938ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 903 ரன்கள் எடுத்ததே அதிகம் ஆகும். இந்த மைதானத்தில் 1896ம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 44 ரன்களுக்கு சுருண்டதே குறைந்தபட்ச ரன் ஆகும்.

மிகவும் பழமையான இந்த மைதானத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்ற இங்கிலாந்து முனைப்பு காட்டும். அதேபோல, இந்த டெஸ்ட் டிரா ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடரை கைப்பற்றும். இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும்.

இந்தியாவிற்கு சவால்:

இதனால், இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணிக்கே அதிக நெருக்கடி உள்ளது. இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு சாதகமாக தங்களுக்கு மைதானம் வேண்டுமென்று கேட்டு வாங்கியே போட்டியில் வெற்றி பெறுகிறது என்ற விமர்சனமும் உள்ளது. அதுவே அவர்களுக்கு மான்செஸ்டர் மைதானத்தில் பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவுக்கு எப்படி?

சொந்த மைதானம் என்பதால் இங்கிலாந்து அணிக்கு கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஆடுவது கூடுதல் பலமாக அமையும். கென்னிங்டன் ஓவல் மைதானத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி அங்கு ஏதுமில்லை. இதுவரை அந்த மைதானத்தில் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி அதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 664 ரன்களை எடுத்துள்ளது. 2007ம் ஆண்டு நடந்த போட்டியில் அந்த வரலாற்றை இந்தியா படைத்தது. குறைந்தபட்சமாக கடந்த 2014ம் ஆண்டு 94 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்காக அந்த மைதானத்தில் தனிநபர் அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் 1979ம் ஆண்டு 221 ரன்கள் எடுத்துள்ளார். 1971ம் ஆண்டு சந்திரசேகர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஒரு போட்டியில் அதிக விக்கெட் ஆகும்.

கடைசி வெற்றி எப்போது?

1971ம் ஆண்டு இந்தியா இங்கு முதல் வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆடியபோது 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டு முதல் கடைசியாக இந்த மைதானத்தில் இந்திய அணி ஆடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா தோல்வி அடைந்தது.