இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் எழுத்தராகப் பணியாற்ற ஐபிபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிக்கை மூலம் 10,277 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 1) தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் வங்கிப் பணிகளுக்கு தகுதி வாய்ந்த தேர்வர்கள், ஐபிபிஎஸ் (IBPS) எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், CRP எழுத்தர் தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 1) தொடங்கி உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதத்தில், தேர்வுக்கு முந்தைய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாக உள்ளன.

தொடர்ந்து முதன்மைத் தேர்வு அதே மாதத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

என்னென்ன வங்கிகள் கலந்துகொள்கின்றன?

பரோடா வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி இந்திய வங்கி (Bank of India), மத்திய வங்கி (Central Bank of India), பஞ்சாப் தேசிய வங்கி, யூனியன் இந்திய வங்கி, மகாராஷ்டிரா வங்கி, இந்தியன் வங்கி பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய வங்கிகளுக்கு, எழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் 895 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.

ஊதியம் எவ்வளவு?

ரூ.24,050-1340/3-28,070-1650/3-33,020-2000/4-41,020-2340/7-57,400-

4400/1-61,800-2680/1- 64,480

இத்துடன் பங்கேற்கும் வங்கியின் விதிகளின்படி, அவ்வப்போது அலவன்ஸும் வழங்கப்படும்.

IBPS கிளார்க் 2025 தேர்வு எப்படி?

தேர்வு இரண்டு முறைகளில் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு

குறிப்பு: நேர்காணல் எதுவும் நடத்தப்படாது.

எனினும் பணி ஆணை பெற தேர்வர்கள் உள்ளூர் மொழித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

IBPS எழுத்தர் பணி 2025; விண்ணப்பிப்பது எவ்வாறு?

தேர்வர்கள் ibps.in என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்

‘Apply Online for CRP-Clerks-XIV’ என்று கூறும் இணைப்பைக் கிளிக் செய்யவும்

‘New Registration’என்பதைக் கிளிக் செய்து உங்கள் அடிப்படைத் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்

உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் இடது கட்டைவிரல் ரேகையைப் பதிவேற்றவும்

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்

உங்கள் விவரங்களைச் சரிபார்த்து ‘Submit’என்பதைக் கிளிக் செய்யவும்

எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்

தேர்வு முறை:

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு

ஆவணம் மற்றும் மொழி சரிபார்ப்பு

மருத்துவத் தேர்வு

முழு அறிவிக்கைக்கு, https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். இதில் விண்ணப்ப விவரம், வயது, ஊதியம், பணி விவரங்கள், காலி இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.