Hyundai Verna Updated Design: ஹுண்டாயின் மேம்படுத்தப்பட்ட வெர்னா கார் மாடலானது, டிசைன், தொழில்நுட்பம், பாதுகாப்பு என பல்வேறு பிரிவுகளில் 25 அப்டேட்களை பெற்றுள்ளது.

அப்டேட்கள் நிறைந்த புதிய வெர்னா:

ஹுண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட வெர்னா கார் மாடலானது அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விலை 10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாயின் மேம்படுத்தப்பட்ட மிட்-சைஸ் செடானான வெர்னா, டிசைன், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வசதியான பயணத்திற்கு என மொத்தம் 25 அப்டேட்களை பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டித்தன்மை நிறைந்த செடான் பிரிவில் தனக்கான இடத்தை வலுவாக்குவதை ஹுண்டாய் இலக்காக கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வெர்னாவானது இளம் மற்றும் செடான் கார் மாடல்களை விரும்புவோரின் கவனத்தை ஈர்ப்பதோடு, ப்ரீமியம் ஓட்டுனர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹுண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெர்னாவின் டிசைன் அப்டேட்கள் என்ன?

வெளிப்புற அப்டேட்களை பொறுத்தவரை ப்ளாக் க்ரோம் ரேடியேட்டர் க்ரில், இரட்டை எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கவனத்தை ஈர்க்கும் வகையிலான 4 ஆயிரத்து 565 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 765 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 2 ஆயிரத்து 670 மில்லி மீட்டர் வீல்பேஸ் அளவீடுகளை அப்படியே தொடர்கிறது. இதன் மூலம் மிட்-சைஸ் செடான் செக்மெண்டில் கிடைக்கும் மிகவும் அகலமான மாடல்களில் ஒன்றாக இருப்பதோடு, விசாலமான இடவசதியை வழங்குகிறது.

வெர்னாவின் உட்புறத்தில் ப்ரீமியம் அப்க்ரேட்கள்:

வெர்னாவின் உட்புறத்தில் பல ப்ரீமியம் அப்க்ரேட்களை ஹுண்டாய் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, D-கட் ஸ்டியரிங் வீல், லெதரேட் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மெமரி ஃபங்க்சனுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் மின்சார முறையில் 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற பயணி இருக்கையும் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் முதல்முறையாக வழங்கப்படும் அம்சங்களாக ரியர் விண்டோ சன்ஷேட், பயணிகள் இருக்கை எலெக்ட்ரிக் வாக் -இன் டிவைஸ் மற்றும் 528 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் ட்ரங்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெர்னாவின் புதிய தொழில்நுட்ப அம்சங்கள்:

இந்த செக்மெண்டில் வேறு எந்த மாடலில் இல்லாத அளவில் மிகப்பெரிய டிஸ்பிளே செட்-அப் அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அவை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பணிகளை மேற்கொள்கிறது. கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களாக வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 70-க்கும் அதிகமான கனெக்டட் அம்சங்கள் மற்றும் 350க்கும் அதிகமான வாய்ஸ் கமேண்ட்களை கொண்ட ஹுண்டாயின் ப்ளூ-லிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத புதிய அம்சங்கள்:

இந்த செக்மெண்டில் உள்ள கார்களில் இதுவரை இடம்பெறாத பல அம்சங்களை முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட வெர்னா பெற்றுள்ளது. அதில் போஸ் ப்ரீமியம் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மாற்றக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன், சரவுண்ட் வியூ மானிட்டர் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதுதொடர்பான அம்சங்களும் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 75-க்கும் அதிகமான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 35 நிலையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. 20 அம்சங்களை உள்ளடக்கிய ஹுண்டாயின் ஸ்மார்ட் சென்ஸ் லெவல் 2 ADAS, மையப்பகுதி ஏர்பேக் உட்பட 7 ஏர்பேக்குகள் மற்றும் செக்மெண்டிலேயே முதல் முறையாக வழங்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட டேஷ்கேம் மற்றும் சரவுண்ட் வியூ மானிட்டரும் அடங்கும்.

வெர்னாவின் இன்ஜின் ஆப்ஷன், விலை விவரங்கள்:

இன்ஜின் அடிப்படையில் வெர்னாவில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 1.5 லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் IVT ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மெனுவல் அல்லது 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். மிட்-சைஸ் செடான் செக்மெண்டில் கிடைக்கும் மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜினாக இந்த டர்போ ஆப்ஷன் திகழ்கிறது.

HX2, HX4, HX6, HX6+, HX8 மற்றும் HX10 ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும் வெர்னாவின் விலையானது, ரூ.10.98 லட்சத்தில் தொடங்கி ரூ.18.25 லட்சம் வரை நீள்கிறது.