வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது. மனைவி வீட்டு பராமரிப்பாளராக ஆற்றும் பணிகள் பொருளாதார மதிப்பு மிக்கவை என்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மருத்துவர் தம்பதிகள் இருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்

திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் தம்பதிகள் இருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "தேனி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனித்தனியே மேல்முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு, "மனுதாரர்கள் இருவரும் புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில், 2011 இல் திருமணம் செய்து கொண்டனர். 2012இல் ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் கார்டியாலஜி படிப்பில் மேற்படிப்பை படிக்க விரும்பியதால், மனைவி தனது பெற்றோருடன் தங்கி குழந்தையை பராமரித்து வந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. . 2020 கொரோனாவிற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரச்னை எழுந்த நிலையில், மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் இருவரும் இந்த மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

குடும்பமே அடிப்படை அலகு.

நமது பண்பாட்டில் குடும்பமே அடிப்படை அலகு. பொருளாதாரத்தை ஈட்டும் பொறுப்பும், வீட்டை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பும் சமமான மரியாதைக்கு உரியவை. பெண்கள் திருமணத்தை தங்கள் பணி வாய்ப்புகளுக்கு தடையாக உணர்கிறார்கள். அதனால் அதனை முழுவதுமாக தவிர்க்க விரும்புகிறார்கள். திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவர்கள் வீட்டு பொறுப்பை ஏற்றால் இந்நிலைமை மாறக்கூடும். "HOUSE WIFE" இருக்க முடியும் என்றால் "HOUSE HUSBAND"களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும் என நாங்கள் கருதுகிறோம்.

வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது.

வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது. மனைவி வீட்டு பராமரிப்பாளராக ஆற்றும் பணிகள் பொருளாதார மதிப்பு மிக்கவை என்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வழக்கைப் பொருத்தவரை. கணவர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டரை கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டார். மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டதால் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது. உத்தரவு நகல் கிடைத்ததில் இருந்து 3 மாதங்களுக்குள்ளாக ஒன்றரை கோடி ரூபாயை மனைவியின் வங்கி கணக்கிலும், ஒரு வருட காலத்திற்குள் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 50 லட்சம் ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என குறி வழக்கை முடித்து வைத்தனர்.