இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு பல விஷயங்களில் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அரசியலிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று தமிழகம் விளங்கி வருகிறது. ஆனால், தற்போது தமிழக அரசியலின் போக்கு தரம் தாழ்ந்து போவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தரம் தாழ்ந்த பேச்சு:

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள், 3ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மிரட்டும் தொனியில், ஆபாசமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்து பேசுவது உண்டு. ஆனால், கட்சியை வழிநடத்துபவர்கள், கட்சியின் தலைவர்கள் அவ்வாறு பேசுவதில்லை.

அண்ணாமலை - உதயநிதி வார்த்தை மோதல்:

பேரிடர் நிவாரண நிதியை தமிழ்நாட்டிற்கு விடுவிக்காத மத்திய அரசிற்கு தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்காத பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதில் தரும் வகையில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அவரை ஒருமையில் பேசியது மட்டுமின்றி மேடையிலே வைத்து வாடா போடா என்று பேசினார். இது அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு பதில் தரும் வகையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலைக்கு வரட்டும் என்று கூறியிருந்தார். இப்போது, அண்ணாமலை தான் தனி ஆளாக அண்ணாசாலைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு ஆரோக்கியமல்ல:

தமிழக அரசியல் களத்தில் சமீபநாட்களாக வன்மத்தையும், வெறுப்பையும் விதமாக கருத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பதற்றத்தையும், இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கை அதிகரிக்கும் விதமாக இதுபோன்று தலைவர்களே பேசுவது சமூகத்திற்கு ஆரோக்கியமற்றது என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வன்மதளங்கள்:

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது முதலே இணையதளங்களில் அந்தந்த கட்சி ஆதரவாளர்கள் தங்களது எதிர்க்கட்சியினரை மிகவும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் பலரது பதிவுகளும் மிகவும் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இதனால், பல தருணங்களில் சமூக வலைதளங்கள் வன்மதளங்களாகவே காணப்படுகிறது.

வார்த்தை பிரயோகத்தில் கவனம்:

இதுபோன்ற சூழலில், பொதுமக்களையும், தனது கட்சித் தொண்டர்களையும் வழிநடத்த வேண்டியவர்கள் இதுபோன்று மேடையில் ஒருமையில் பேசுவதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இதனால், இனி வரும் நாட்களில் அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் தங்களது வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.