சட்டமன்ற தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக-விற்கு எதிர்க்கட்சிகள் தரும் அழுத்தத்தைக் காட்டிலும் கூட்டணி கட்சிகள் தரும் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இடம்பிடித்துள்ள ஆளுங்கட்சியான திமுக-விற்கு முதன்மை கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதிக அழுத்தம் தந்து வருகிறது.

அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு:

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு கோரிக்கையைத் தொடர்ந்து ஒதுக்கி வரும் காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கேச் சென்று ராகுல்காந்தியை நேரில் சந்தித்தார் கனிமொழி.

கனிமாெழி நடத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது அவரிடம் பேசிய ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், 2 ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீதங்கள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைவிட முக்கியமாக ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி முடிவு:

ராகுல்காந்தியின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக்கொண்ட கனிமொழி, ஆட்சியில் பங்கு என்பது தமிழக வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை. அதனால், ஆட்சியில் பங்கு என்பது அளிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டது. வரும் தேர்தலில் அதிகபட்சமாக 27 தொகுதிகள் வரை ஒதுக்கலாம். 41 தொகுதிகள் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீதங்கள் இடங்கள் ஒதுக்குவது, 2 ராஜ்யசபா இடங்கள் அளிப்பது குறித்து எல்லாம் தன்னால் முடிவு எடுக்க முடியாது என்றும் கனிமொழி ராகுல்காந்தியிடம் கூறியுள்ளார்.

விடாப்பிடியாக இருக்கும் காங்கிரஸ்:

இந்த சந்திப்பு சுமூகமாக நடந்ததாக கனிமொழி கூறியிருந்தாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்பதில்கூட இறங்கி வரத் தயாராக இருக்கும் காங்கிரஸ், அதிக தொகுதிகள் என்பதில் விடாப்பிடியாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சார்பில் இருந்து காங்கிரசுக்கு தொடர்ந்து அழைப்பு வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரசில் உள்ள சில நிர்வாகிகள் தவெக-வுடன் இணைய வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர். ஆனால், தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள்தான் திமுக-வுடன் இருப்பதே ஆரோக்கியமானது என்று கூட்டணியைத் தொடர வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அழுத்தம் தரும் கூட்டணி:

தேர்தல் தேதி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக-வின் தொகுதிப் பங்கீடு இன்னும் சில வாரங்களில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுக, தவெக, நாம் தமிழர் தரும் அழுத்தத்தைக் காட்டிலும் தற்போது திமுக-விற்கு கூட்டணி கட்சிகள் தரும் அழுத்தமே அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.