இலங்கையை துவம்சம் செய்த டிட்வா புயல் ;

தென்மேற்கு வங்கக் கடலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையில் மழையை வாரி வழங்கி துவம்சம் செய்தது.

இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக இப்போதும் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றன.

இலங்கையில் டிட்வா புயல் நல்ல மழையை கொட்டி விட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப் பகுதிகளில் 28-ந் தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்தது.

இன்று ( 01-12-2025 ) காலை மழை முதல் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளித்துறை சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த தகவல் எதுவும் விடுக்கவில்லை. இதனால் பெற்றோர்களுக்கு குழப்பம் சூழலே நிலவியது.

இது குறித்து அண்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக் குழந்தைகளை பரிதவிக்க விடுவதா ? முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கே வேண்டும்.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவச் செல்வங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இன்று காலை 7 மணியளவில் டித்வா புயல் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், அதனால் சென்னையில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அரசு செய்யாததால் தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். சூழலுக்கு ஏற்ப பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.