Ditwah Cyclone: தஞ்சாவூர்: டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதம்பை பகுதியில் 38.40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளம் சம்பா, தாளடி நாற்றுகள் மழைநீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இந்த புயல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (30.11.2025) அதிகாலையில், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டிட்வா புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் உள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை திருமங்கலகோட்டையில் 30 மிமீ, பந்தநல்லூரில் 34 மிமீ, அதம்பை பகுதியில் 38.40 மிமீ, பேராவூரணியில் 28 மிமீ என மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

டிட்வா புயல் காரணமாக தஞ்சையில் பெய்து வரும் கனமழையில் பருத்திக் கோட்டை, ஆதனக்கோட்டை பொன்னாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விளைநிலங்கள் ஏரி போல் காட்சி அளிக்கின்றன.

.டிட்வா புயல் நாளை கரை கடக்க உள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தாலுக்கா பருத்திக் கோட்டை, சின்ன பருத்திக் கோட்டை, ஆதனக்கோட்டை, பொன்னாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. நடவு செய்து 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வேர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். டிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் மண்டி இருப்பதால் வெள்ள நீர் விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. பயிர்கள் முழுவதும் அழுகி விட்டதால் மீண்டும் மறு நடவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து வடிகால் வாய்க்காலை போர்க்கால தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியும் பாதிக்கப்பட்டுள்ளது.