நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் பாபநாசம் தொகுதி வேட்பாளரான அனீஸ் பாத்திமா தாக்கப்பட்ட விவகாரத்தில் இயக்குநர் சேரனை கெட்ட வார்த்தையில் இணையவாசி ஒருவர் திட்டியுள்ளார். அதற்கு சேரனும் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சிக்கு சேரன் ஆதரவு

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களுடைய விருப்பமாக கட்சிக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், பரப்புரை மேற்கொண்டும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்கு கேட்கவும் செய்தனர்.

அந்த வகையில் பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தார். அதேசமயம் புதிதாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனீஸ் பாத்திமா மீது தாக்குதல்

இந்த நிலையில் தஞ்சாவூர் பாபநாசம் தொகுதி வேட்பாளரான அனீஸ் பாத்திமா வாக்குப்பதிவு நாளில் திமுக தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டார். இதற்கு பிற அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். அனீஸ் பாத்திமா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நாதக ஆதரவாளரான சேரன் எதுவும் சொல்லவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து விஜய் ரசிகர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் இணையவாசி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். இன்னொருவர் அனீஸ் பாத்திமா தாக்குதல் தொடர்பாக மு.க.ஸ்டாலினை ஏன் குறை சொல்லவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த சேரன், “இங்கதாண்டா இருக்க அண்ணா... அப்படின்னு சொல்லலாம். ஆனா உங்க அம்மாவ நான் அப்படி சொல்ல மாட்டேன்.. நீ இல்ல நான்... பேசணுனா எல்லா ஆங்கிள்லயும் பேசலாம்..

உங்கள மாதிரி எல்லாத்துக்கும் எல்லா இடத்திலயும் எல்லா மொழிகள்லையும் கத்துறவங்க அல்ல நாங்கள்.. அறியா சிறுவர்களை தூண்டிவிட்டும், காசுக்காக மாரடிக்கிற கூட்டத்தையும் தூண்டிவிட்டு கோஷம்போட வைக்க மாட்டோம்... சட்டப்படி கட்சி அதற்கான நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்காங்க.. தேர்தல் வந்தது என் கருத்தை நாகரீகமா பதிவு செய்தேன்.. இங்க எல்லாரும் விஜய்க்கு ஆதரவா இருக்கனும்னு கட்டாயம் இல்ல... சமூகத்துக்கு உண்மையா இருக்கணும்ன்றதுதான் முக்கியம்..

ஆனால் நீங்க விஜய்க்கு அரசியல் ரீதியா தங்கள் கருத்துக்களை பதிவு செய்த எல்லாரோட பக்கங்கள்லயும் போய் நீங்களும் உங்க சகாக்களும் செஞ்ச நாகரீகத்தை எல்லாம் கொஞ்சம் பொயிட்டு பாருங்க... தயவுசெய்து உங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி சித்தி சித்தப்பாக்கிட்டலா கையில கால்ல விழுந்து விஜய் மாமாவுக்காக பேசுனதை எல்லாம் காமிங்க... நீங்க எவ்வளவு அற்புதமா கத்துக்கிட்டு அரசியல் பேசியிருக்கிங்கன்னு... தேவர் மகன் படம்லாம் பாத்து யோசிங்க தம்பி.. மொதல்ல நான் திமுகன்னு உங்ககிட்ட எந்த அறிவாளி சொன்னது” என கேள்வியெழுப்பினார். இதனைத் தொடர்ந்து சேரன் தன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தை லாக் செய்துள்ளார்.