கிறிஸ்துமஸ் விழாவில் இபிஎஸ்

அதிமுக சார்பில் சென்னையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய பரிசுப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசின் மூலம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்படி செய்யப்பட்டது.

இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர் 2000 வருடங்களுக்கு முன்னால் நமக்கு போதித்த போதனைகள் இன்றைக்கும் நமக்கு பயனுள்ளதாக இருப்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். இயேசுபிரான் அவர்கள் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாக வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும், மக்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் நமக்கு அறிவுறுத்தினார். இந்த கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

குட்டி கதை சொன்ன இபிஎஸ்

ஒரு ஊரில், ஒரு விவசாயி, தனது விளை நிலத்தின் அருகில் ஓர் ஆட்டுப்பண்ணை வைத்து, நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பர்களையும், காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பால் ஆடுகள் நன்கு வளர்ந்தன. இதை பார்த்த சில ஓநாய்கள், எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று, நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால் காவலாளிகளின் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்களால் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இரையாக்க திட்டமிட்டன. ஒருநாள் இரவில், ஓநாய்கள் ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக் கொண்டு, கள்ளவாசல் வழியாக உள்ளே வந்து, தாங்களும் ஆடுகள்தான் என்பதைப் போல நடித்து, அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து, தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரை ஆக்கிவிட்டன.

ஓநாய் கூட்டத்தை நம்பாதீங்க

அந்த அப்பாவி ஆடுகள், தாங்கள் ஓநாய்க்கு இரையாகும் போதுதான், அந்த ஓநாய்களின் சுய ரூபத்தை அறிந்து, 'ஐயோ மோசம் போய்விட்டோமே' வருந்தின. என இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய உண்மை என்னவென்றால், 'காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை' இன்றைய அரசியலில், பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் 'விடியல்' என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது.

தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்காக கபட நாடகம் ஆடுகின்றனர். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என பேசுவார்கள். மற்றொரு மேடையில் எனது மனைவி கிறிஸ்தவர், எனவே நானும் கிறிஸ்தவர் தான் என பொய் பேசுவார்கள்.இன்னொரு மேடையில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல எனக் கூறி நடிப்பார்கள். இந்த கபட வேடதாரிகள் யார் என்பதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி ஏன்.?

ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைப்பார்கள். வைத்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அதிமுகவும் கூட்டணி 1991 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆக, கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அது, அதிமுகவிடம் இருக்கிறது என்பதை சிறுபான்மை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனவே மக்கள் குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்கள் வருகின்ற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் நடக்கின்ற சீர்கேடுகளை களைய அதிமுகவோடு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.