திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமம் பிரம்மன்னர் தெருவை சேர்ந்தவர் முத்து வயது (90). இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சேகர் வயது (45) என்பவர் உட்பட மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். முத்து தனக்கு சொந்தமான நிலத்தை மூன்று மகன்களுக்கும் தலா ஒன்றரை ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்துள்ளார். முத்து தன்னுடைய பெயரில் ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலம் மற்றும் ஒரு காலி வீட்டுமனை ஆகியவற்றை வைத்துக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் முத்து பெயரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சேகர் அடிக்கடி நச்சரித்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துவோ உனக்கு எழுதிக் கொடுத்த நிலத்தில் வீடு கட்டிக்கொள் என் பெயரில் இருக்கும் இடத்தை இப்போது கேட்காதே நான் எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது

அதனைத்தொடர்ந்து பழங்கோயில் அருகே உள்ள நிலத்தில் முத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற சேகர் வீட்டு மனையை என் பெயருக்கு எழுதிக் கொடுக்க முடியுமா முடியாதா என மீண்டும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் வாய் தகராறு முற்றியது, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் முத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த முத்துவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் முத்துவின் உடலை பிரேத பரிசோதனை பிறகு உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. சொத்திற்காக பெற்ற தந்தை என்று பாராமல் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

PMAY திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!