அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் மாதம் தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழுவின் நவம்பர் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 07.11.2025, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டப் பொருள்கள் என்னென்ன?

திறன் இயக்கம் (THIRAN)

a) செப்டம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் (காலாண்டுத்தேர்வு) திறன் மாணவர்களில் "அடிப்படைக் கற்றல் விளைவில்" (Basic Learning Outcome) பாடவாரியாக தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத மதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) திறன் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தரநிலை அறிக்கை (Report Card) பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து விவாதிக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும்

a) முதல் பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், வகுப்பு நிலையில் (Grade Proficiency) உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) முதல் முறையாக பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வகுப்பு 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு Holistic Report Card வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACiS)

a) இடைநின்ற மற்றும் இடைநிற்க வாய்ப்புள்ள குழந்தைகள் 9-12 வகுப்பில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள இல்லம் தேடிக் கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர், தலைவர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இடை நின்ற மாணவர்களின் பட்டியலைப் பகிர்ந்து அதன் மூலம் எதிர்காலத்தில் அரசு தேர்வு எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் இடைநிற்பதைக் கவனத்தில் கொண்டு மீண்டும் பள்ளிக்கு அவர்களை அழைத்துவரத் தீர்மானத்தை நிறைவேற்றல்.

1098 மற்றும் 14417

b) குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இவற்றின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு இவை அனைத்தும் இல்லாமல் தடுப்பதற்கு உறுதுணையாக உள்ள 1098 மற்றும் 14417 ஆகிய எண்களுக்கு உடனடி தகவல் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றல்.

படிப்பதற்கான ஆர்வமின்மை, அலைபேசி மற்றும் போதைப் பழக்கத்திற்குத் தள்ளப்பட்டக் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் ஆற்றல்படுத்துனர் மற்றும் ஆலோசகர்களை மாதம் ஒருமுறை வரவழைத்து, குழந்தைகளுக்கு உதவிடத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உயர்கல்வி வழிகாட்டி

(a) உயர் கல்வியில் சேராத 2024 2025 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் விவரங்களை தலைமையசிரியர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோர் /பாதுகாவலர்களைச் (Guardian) சந்தித்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஊக்கப்படுத்திடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

(b) மாணவர்களுக்கு கல்லூரி களபயணம் ஏற்பாடு செய்வதற்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவிடவும், மாணவர்கள் இப்பயணத்தில் பங்கேற்றிட அனுமதி வழங்கிட பெற்றோருக்கு தகவல் அளித்திடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

(c) CLAT போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுதியுள்ள மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர்கள் வழியாக மாணவர்களை ஊக்கவிக்க கேட்டுக்கொள்ள வேண்டும்.

சிறப்புத் தேவைகளுடைய குழந்தைகள் / மாற்றுத்திறனாளிக் குழந்தைகள்

a) ஒன்றிய அளவில் அக்டோபர்-2025 மற்றும் நவம்பர்-2025 ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான (பிறப்பு முதல் 18 வயது வரை) மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்த வேண்டும்.

அதேபோல மணற்கேணி, மகிழ்முற்றம் மாணவர் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள் தமது குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்குத் தொடர்ந்து சென்று கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தலைமையாசிரியர் உறுதிசெய்ய வேண்டும். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.