முதலமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது துளியளவும் நம்பிக்கையில்லை என தவெக செய்தித் தொடர்பாளர் ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர் என்பதால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பகுத்தறிவு வளர்க்கும் தமிழ்நாட்டில் ஜோதிடரை நியமிப்பதால் மூடநம்பிக்கைகளுக்கு வழிவகை செய்வது போலாகும் என பல கட்சி தலைவர்களும் வலியுறுத்த முதலமைச்சர் விஜய் அதனைப் பற்றி பரிசீலனை செய்வதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் விஜய் பற்றி பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய் அவர்களுடைய பிறப்பு ஒரு அதிசய பிறப்பு அவர் மக்களை காப்பாற்ற வந்த ஒரு தேவதூதன். அதிமுக மற்றும் திமுக கலாச்சாரத்தை மாற்றியமைக்க இவர் வருவார் என்று எனக்கு தோன்றியது. முதலமைச்சர் விஜய் என்னை தமிழ்நாடு அரசின் சிறப்பு செயல் அதிகாரியாக நியமித்தார். ஒருவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்ததால் தான் அந்த பதவி எனக்கு கொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்.

ஜோதிடராக என்னை நினைத்து போடவில்லை. எத்தனை நேரம் தான் அவருக்கு நான் ஜோதிடம் பார்க்க முடியும். நான் அவருக்கும் ஜோதிடம் பார்க்கவில்லை. விஜய்க்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கிடையாது. என்னுடைய பேச்சு அவருக்கு பிடிக்கும் அவ்வளவு தான். ஜோதிடத்தின் மீது பெரிய அளவு நம்பிக்கை இல்லை என சொல்ல முடியும். அவருக்கும் எனக்கும் அப்பா - மகன், நண்பர்கள் மாதிரி எதார்த்தமான உறவு உருவாகி விட்டது. மற்றவர்கள் சொல்வது போல ஆஸ்தான ஜோதிடரை கொண்டு வந்து அரசு பதவியில் அமர்த்தியிருக்கிறார் என்பது உண்மை இல்லை.

ஒரு நல்ல மனிதர், அறிவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் இந்த வாய்ப்பை விஜய் வழங்கியிருப்பார் என்று தான் நான் நினைக்கிறேன்” என ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இவர் தான் 2026 தேர்தலில் விஜய் தான் ஜெயிப்பார் என்பதை உறுதியாக கணித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.