தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் விஜய். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்ற இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

திருச்சி வரும் விஜய்:

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அலுவலக பணி காரணமாக தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இயலாத சூழல் இருந்தது. இந்த சூழலில், திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு முதலமைச்சர் விஜய் நாளை நன்றி தெரிவிக்கிறார். இதற்காக அவர் நாளை திருச்சி வருகிறார்.

இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் யார்? யாருக்கு அனுமதி இல்லை என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தவெக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும், திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேருக்கு அனுமதி:

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு அனுமதி கிடையாது:

குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.

QR குறியீடு அனுமதிச் சீட்டு:

QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.