சென்னையில் தோழியை கிண்டல் செய்த இளைஞரை ஆள் மாறி அடித்த நண்பனால் பரபரப்பு !! நடந்தது என்ன ?

சென்னை ஓட்டேரி அனுமந்தன் தெரு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் ( வயது 37 ) இவர் ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தேநீர் கடையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்துள்ளர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மர்ம நபர் ஒருவர் வெங்கடேசனை கடுமையாக தாக்கியுள்ளார். அப்பொழுது ரோந்து பணியில் இருந்த போலீசார் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு பகுதியை சேர்ந்த ஷியாம் ( வயது 22 ) என்பதும் இவரது தோழி ஒருவரை சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு நபர் கிண்டல் செய்ததால் தோழி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஷியாமிடம் தெரிவித்துள்ளார். ஷியாம் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் தான் தனது தோழியை கிண்டல் செய்துள்ளார் என்று எண்ணி தவறுதலாக அவரை அடித்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ஷியாம் மீது வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலனி போலீசார் அவரை நீதி மன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரிஞ்சி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது.

சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான் ( வயது 30 ) இவர் கொடுங்கையூர் வேதாந்த முருகப்பா தெரு பகுதியில் பிரிஞ்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மூன்று பேர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். உஸ்மான் பணம் கேட்டவுடன் கடையின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பீர் பாட்டிலால் உஸ்மானை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உஸ்மான் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து புளியந்தோப்பு நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( எ ) பாவாடை ( வயது 19 ) அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ( வயது 19 ) திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ( வயது 19 ) என மூன்று பேர் குடிபோதையில் பிரிஞ்சி கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டு பணம் பறித்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை பிடிக்க முற்பட்டபோது சஞ்சய் என்ற நபர் கீழே விழுந்ததில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாவு கட்டு போட்ட போலீசார் , சஞ்சய் சந்தோஷ் குமார், சக்திவேல் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.