சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று சேர வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் ஐபிஎல் போட்டி, இசை கச்சேரியின் போது மெட்ரோ ரயிலில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி இலவசமாக பயணிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஸ் பெற்றவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் யுவன் சங்கர் ராஜா இசை கச்சேரி

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள YMCA கல்லூரி மைதானத்தில் "The Ulniverse Tour" Live Concert இன்னிசை கச்சேரி டிசம்பர் 13, 2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் Kyn Hood Technologies Private நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. எனவே KYN நிறுவனம் மூலம் நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (Email) மற்றும் WhatsApp சேனல் வழியாக ஒரு பிரத்யேகமான (Unique) மெட்ரோ பயணச்சீட்டு (Metro Pass) வழங்கப்படும்.

மெட்ரோவில் இலவச பயணம்

இந்த பிரத்யேக QR குறியீடு கொண்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி பயணிகள் நிகழ்வு நடைபெறும் நாளான டிசம்பர் 13, 2025 அன்று சென்னையில் செயல்படும் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்புவதற்காக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டித்துள்ளது. நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும். விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும்.

இரவு 12 மணி வரை ரயில் சேவை

பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மட்டுமே மாறி செல்லலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.